சென்னை: சென்னை அமைந்தகரையில் மருத்துவரின் இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மருத்துவர் அருள்ராஜின் 4 வயது குழந்தையை வீட்டில் வேலை செய்யும் பெண் கடத்திச் சென்றதாக காவல்நிலையத்தில் நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் பார்த்தனர். அதில் குழந்தையைக் கடத்திச் சென்ற கார் வீட்டுக்கு வந்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
வீட்டுப் பணிப்பெண் அம்பிகாவின் தொலைபேசி எண்ணுக்கு வந்த அழைப்புகள் குறித்து ஆய்வு செய்ததில், ஒரே எண்ணில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எண் யாருடையது என்று ஆராய்ந்த போது, அது முகமது கலிமுல்லாவுடையது என்பது தெரிய வந்தது. குழந்தையைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட காரும் முகமது கலிமுல்லாவின் பெயரிலேயே பதிவாகியிருந்ததால், குழந்தையை கடத்தியது கலிமுல்லா - அம்பிகாதான் என்பதை காவல்துறையினர் உ றுதி செய்தனர். கலிமுல்லாவின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து அம்பிகாவின் செல்போன் எண்ணை வைத்து அவர் நீலாங்கரையில் உள்ள ஒரு ஹோட்டலில் குழந்தையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
இருவர் மீதும் வேறெந்த வழக்கும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர் அருள்ராஜ் தனது வீட்டுக்கு அம்பிகாவை, மொபைல் ஆப் மூலம் பணியமர்த்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இது மிகவும் தவறான முன்னுதாரணமாக உள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதுபோன்ற பணிக்கு நன்கு தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்துவது நல்லது. மேலும், காவல்துறையின் இணைதயளத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி ஒரு நபரின் விவரங்களை அளித்தால் அவரது பின்னணியை காவல்துறையே நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை தரும். அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இந்த கடத்தலை திட்டமிட்டதாகவும், யூ-டியூப்பில் விடியோ பார்த்து, குற்றவாளிகள் இருவரும், குழந்தை கடத்திய பிறகு எப்படி காவல்துறையிடம் பேச வேண்டும் என்று பயிற்சி எடுத்ததாகவும் கூறியுள்ளனர்.