மாங்கனித் திருவிழா: கைலாசநாதர் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவையொட்டி, அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் கைலாசநாதர் காட்சி கொடுக்கும் நிகழ்வு மற்றும் சுவாமி திருவீதியுலா புதன்கிழமை  நடைபெற்றது.
மாங்கனித் திருவிழா: கைலாசநாதர் வீதியுலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவையொட்டி, அம்மையாருக்கு கைலாச வாகனத்தில் கைலாசநாதர் காட்சி கொடுக்கும் நிகழ்வு மற்றும் சுவாமி திருவீதியுலா புதன்கிழமை  நடைபெற்றது.
மாங்கனித் திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் கோயிலுக்கு செல்லும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அமுது படையல் நிறைவையொட்டி, சித்தி விநாயகர் கோயிலில் அம்மையாரின் கணவரான பரமதத்தருக்கு 2-ஆவது திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் புனிதவதியார் புஷ்ப சிவிகையில் சித்தி விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினார். பரமதத்தர், அவரின் 2-ஆவது மனைவி ஆகியோர் புனிதவதியாரை வணங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, புனிதவதியார் பேய் உருவம் ஏற்று சோமநாதர் கோயிலுக்கு எழுந்தருளும் வகையிலான நிகழ்ச்சி நடைபெற்றது.  
அம்மையார் பேய் உருவம் கொண்டு வீதியுலா செல்லும் நிகழ்வு புதன்கிழமை அதிகாலை 4.30  மணியளவில் நடைபெற்றது. வீதியுலாவின்போது பாரதியார் சாலையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.  இருள் சூழ்ந்த நிலையில் பேய் உருவம் கொண்ட அம்மையார் ஊர்வலம் நடைபெற்றது. சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர், கைலாச வாகனத்தில் பெருமாள் கோயில் அருகே எழுந்தருளி, அம்மையாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மையார் கைலாசநாதர் அருகே வந்த போது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து அம்மையாரை சோமநாதர் கோயிலுக்கு எழுந்தருளச் செய்தனர். 
கைலாச வாகனத்தில் சுவாமி, அம்பாள் பெரு வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 
வழக்கமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் 4 நாள்கள் கடந்த ஆண்டு வரை நடைபெற்றுவந்த நிலையில், நிகழாண்டு முதல் 5 நாள்களாக திருவிழா நீட்டிக்கப்பட்டது. 
மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு, திருக்கல்யாணம், வெள்ளைச்சாற்று, பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், பிச்சாண்டவர் வீதியுலா, அமுதுபடையல், இறைவன் காட்சித் தருதல் ஆகியவற்றுடன் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
ஆக.15-இல் விடையாற்றி:  விடையாற்றி நிகழ்ச்சியின்போது, பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவதோடு, புனிதவதியாரின் வீதியுலா நடைபெறுகிறது. 
ஒரு மாத காலம் கோயில் மணிமண்டபத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், பாரதியார் சாலையில் திருவிழாக் கடைகளும் தொடர்ந்து நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com