கோவை கொடிசியாவில் 5ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா: ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறுகிறது

கோவை கொடிசியாவில் 5 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஜூலை 19 (வெள்ளிக்கிழமை) தொடங்கி  28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை கொடிசியாவில் 5ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா: ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறுகிறது

கோவை கொடிசியாவில் 5 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஜூலை 19 (வெள்ளிக்கிழமை) தொடங்கி  28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி, புத்தகத் திருவிழாவின் தலைவர் பி.விஜய் ஆனந்த் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது:
கோவை கொடிசியா அமைப்பும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து 5 ஆவது ஆண்டாக நடத்தும் புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28 ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், 250க்கும் மேற்பட்ட நூல் விற்பனையாளர்கள் பங்கேற்று தங்களது அரங்குகளை அமைக்கின்றனர்.
 இதில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. கண்காட்சி தினசரி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். கண்காட்சி வளாகத்தில் தினசரி கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாக்கள் நடைபெற உள்ளன. கண்காட்சியின் தொடக்க விழா 19ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து 20ஆம் தேதி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. மாலையில் எழுத்தாளர் வண்ண நிலவன் தலைமையில் இளம் படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
இதில் குணா கந்தசாமி, சோலை மாயவன், ஞா.குருசாமி ஆகிய விருதாளர்களைப் பாராட்டி டி.பாலசுந்தரம், எஸ்.நடராஜன், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் பேசுகின்றனர். 21ஆம் தேதி காலையில் விருது பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலையில் எழுத்தாளர் வண்ண நிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. கவிஞர் கலாப்ரியா பாராட்டுரை வழங்குகிறார்.
22 ஆம் தேதி காலையில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும், 100 அரசுப் பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வழங்கும் விழாவும் நடைபெறுகின்றன. மாலையில், "காந்தியம் ஓர் அற்புதமான வாழ்வியல் முறை‘ என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேசுகிறார். 23 ஆம் தேதி நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் எம்.கோபாலகிருஷ்ணனின் ஒரு கூடைத் தாழம் பூ, மகுடேசுவரனின் நிகழ்பாடு, சு.வேணுகோபாலின் கவிதைத் திறனாய்வு வரலாறு ஆகிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.
அன்று மாலையில் நீ, நான், நிஜம்  என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேசுகிறார். 24 ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் பேச்சுப் போட்டியும், பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகமும் நடைபெறுகின்றன. 25 ஆம் தேதி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
25 ஆம் தேதி கவிஞர் கண்ணதாசன் பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26 ஆம் தேதி நாடகப் போட்டி, சிறுகதைப் போட்டி, குறும்படப் போட்டிகளும், பெண் கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கமும் நடைபெறுகின்றன. அன்று மாலை மும்பை டப்பா வாலாக்கள் தொடர்பான சிறப்புரை நிகழ்ச்சியும், 27ஆம் தேதி கவிஞர் கவிதாசன் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கான நிகழ்ச்சியும், மாலையில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்கும் கருத்தரங்கமும் நடைபெறுகின்றன. 28 ஆம் தேதி காலையில் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியும் அன்று மாலையில் நிறைவு விழாவும் நடைபெறுகின்றன.
வெளியூர்களில் இருந்து வரும் வாசகர்கள், பொதுமக்களுக்காக அவிநாசி சாலையில் இருந்து கொடிசியா வளாகம் வரை இலவச வாகன வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறிய அவர்கள், இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் ரூ.3.50 கோடிக்கு புத்தக விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் கவிதாசன் பேசும்போது, கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தொழில் நிறுவனங்களில் நூலகங்கள் அமைப்பதற்கும், தொழிலாளர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும்விதமாக அவர்களுக்கு சலுகை விலையில் நூல்கள் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், அறிவுக்கேணி அமைப்பின் தலைவர் இ.கே.பொன்னுசாமி, டி.பாலசுந்தரம், எஸ்.நடராஜன், கொடிசியா செயலர் பி.எஸ்.தேவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com