நாடு முழுவதும்  ஒரு மணிநேரம் ரயில் நிறுத்தப் போராட்டம்

மத்திய அரசு ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, இந்தியா முழுவதும் விரைவில் ஒரு மணிநேரம் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றார் தெற்கு ரயில்வே ஊழியர்கள்


மத்திய அரசு ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, இந்தியா முழுவதும் விரைவில் ஒரு மணிநேரம் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றார் தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம். 
திருச்சி தனியார் அரங்கில் தெற்கு ரயில்வே கோட்ட நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற  அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:  நாடு முழுவதும் சரக்குகளைக் கையாளும் நாடுகளில் இந்தியா உலகளவில் 4 -ஆம் இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 1,250 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. ஆண்டுக்கு 2.3 கோடி மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள்.12,500 பயணிகள் ரயில்கள், 7,500 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 13 லட்சம் ஊழியர்கள் ரயில்வேயில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில், ரயில்வே தனியார் மயமாக்கப்பட்டால் ரயில் பயணச்சீட்டுகளின் விலை 26 சதவிகிதம் உயரும். பாதுகாப்பான பயணம் இருக்காது. தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். ரயில்வேயில் ஏற்கெனவே உணவு வழங்குதல், துப்புரவுத் தொழிலாளர்கள் நியமனம் ஆகியவை  தனியாரிடம் விடப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. கனடா, ஐரோப்பாவில் ரயில்வே தனியார் மயமாக்கப்பட்டு தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. எனவே மத்திய அரசு ரயில்வேத் துறையைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து இந்தியா முழுவதும் விரைவில் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதில் இந்தியா முழுவதும் உள்ள 13 லட்சம் ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள். ரயில்வே தொழிற்சங்க அகில இந்திய அமைப்பு விரைவில் போராட்டத் தேதியை அறிவிக்கவுள்ளது. தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்.  தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு வரும் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என்றார் அவர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com