தமிழ்நாடு

தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சியில் 3 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பு

16th Jul 2019 01:42 AM

ADVERTISEMENT


 தருமபுரி வாசிக்கிறது'  என்ற புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியில்  3 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்று புத்தகம் வாசித்தனர்.
தருமபுரியில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரையில்  2 - ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை தகடூர் ஒளவை அதியமான் பேரவை என்ற அமைப்பும்,  பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்துகின்றன. இதையொட்டியும்,  பள்ளிக் கல்வித் துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டும்   தருமபுரி வாசிக்கிறது'  என்ற நிகழ்வு  தருமபுரி  இலக்கியம்பட்டி  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை வலியுறுத்தி  நடத்தப்பட்ட  விழாவுக்கு,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி தலைமை வகித்தார்.  நிகழ்வை ஆட்சியர் சு.மலர்விழி தொடக்கி வைத்து பேசியது: 
தருமபுரி  மாவட்டத்தில்  பருவ மழை பெய்யும் நிலை உள்ளது.  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மழை நீர் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள்  உள்ள கட்டடங்களை சுத்தம் செய்து, மழைநீரைச் சேமிக்கும் வகையில்  வைத்திருக்க வேண்டும். நீர் மேலாண்மைத் திட்டத்தை மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். அதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார். 
 இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன்,  புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுத் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன், வரவேற்புக் குழுச் செயலரும்,  முன்னாள் எம்.பி.யுமான இரா.செந்தில்,   நிர்வாகிகள் இரா.சிசுபாலன், சி.ராஜசேகரன், எம்.கார்த்திகேயன், ஆர்.கே.கண்ணன், மா.பழனி, வெ.ராஜன், கவிஞர் கே.சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தருமபுரி மாவட்டத்தில்  உள்ள பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த 3 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்று காலை 10 முதல் 11 மணி வரையில் நூல்களை வாசித்தனர். வாசிப்புத் திறன் மூலம் பொது அறிவை வளர்த்துகொள்ள பல்வேறு வகையான புத்தகங்களை நாட வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது.
இதேபோல்,  தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,  கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் எம்.சகுந்தலா, ஜா.பாக்கியமணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் இ.பி.பெருமாள், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT