சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் அருகே குழந்தையை மீட்ட பொதுமக்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அது தங்களது குழந்தை தான் என்று பெற்றோரும் அடையாளம் காட்டியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்ம நபர் கடத்திச் சென்றது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஒடிஸா மாநிலம் நவ்ரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சிங். இவர், சென்னையில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் சொந்த ஊர் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடையில் மனைவி மற்றும் 2 வயது மகன் சோம்நாத் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 2 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அருகில் இருந்த குழந்தை மாயமாகி இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரயில்நிலையம் முழுவதும் தேடினர். இருப்பினும் குழந்தை கிடைக்கவில்லை.
இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் பேரில், சென்ட்ரல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக, கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு மர்ம நபர் குழந்தையை தூக்கிச் செல்வது தெரியவந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.