தமிழ்நாடு

சென்னையில் 4 நடை மேம்பாலங்களில் மக்கள் பயன்பாடு குறைவு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

16th Jul 2019 01:41 AM

ADVERTISEMENT


சென்னையில் மாநகராட்சியால் அமைக்கப்பட்ட நான்கு நடைமேம்பாலங்களில் மக்கள் பயன்பாடு குறைவாக இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) கேள்வி எழுப்பினார். அதற்கு, அமைச்சர் வேலுமணி அளித்த பதில்:-
சென்னை சைதாப்பேட்டை, மத்திய கைலாஷ் பகுதியில் ராஜீவ் காந்தி சாலை, கெனால்பேங் சாலை, காந்தி மண்டபம் சாலை சந்திப்பில் எல் வடிவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த உயர்நிலை  மேம்பாலம் அமைக்கும் பணி முடிவடைந்தவுடன், இப்போதுள்ள போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்.
நான்கு மேம்பாலங்கள்: சென்னை மாநகராட்சியால் நான்கு நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்தப் பாலங்களில் மக்கள் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் பொது மக்கள் படிகளில் ஏறி சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
உத்தமர் காந்தி சாலையில் உள்ள நடைமேம்பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் மின் தூக்கி வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகும் மக்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. ஆனாலும், உறுப்பினரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுப்போம்.
எத்தனை பாலங்கள்:   திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் ரூ.162.60 கோடியில் 58 பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.928.10 கோடியில் 550 பாலங்கள் கட்டும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 517 பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT