சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதம்: புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணிக்கத் திட்டம்

DIN | Published: 16th July 2019 03:38 AM


ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர். 
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகாதபட்சத்தில் புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணிக்கப் போவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின்  தலைவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
 தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். 
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ பட்டமேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ பட்டமேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே  இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்ப கொண்டுவர வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறோம்.  இதில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இதைத் தவிர மாவட்டத் தலைநகரங்களிலும் அத்தகைய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டப் பேரவையில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்றால், வரும் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி
பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மதியம் பெய்த தூறல் டிரெய்லர்தான்: மாலை அல்லது இரவில் இருக்கிறது மழை விருந்து!
இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் அருண் ஜேட்லி: ராமதாஸ் இரங்கல்
மரியாதைக்குரியவர் காலமாகிவிட்டார்: தமிழிசை இரங்கல்