தமிழ்நாடு

மாநில அரசை வெறும் தபால்காரர் போல் மாற்றி விடும்: ஏன்.ஐ.ஏவுக்கு கூடுதல் அதிகாரம்  குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கருத்து 

15th Jul 2019 06:50 PM

ADVERTISEMENT

 

சென்னை: மாநில அரசை வெறும் தபால்காரர் போல் மாற்றி விடும் என்று ஏன்.ஐ.ஏவுக்கு கூடுதல் அதிகாரம்  வழங்கும் சட்டத்திருத்தம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  முத்தரசன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது:

ஜூலை 15 அன்று தேசியப் புலனாய்வு முகமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அது விசாரிக்கத்தக்க குற்றங்களின் பட்டியலில் பின்வரும் குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆள் கடத்தல், கள்ள நோட்டுகளை விநியோகித்தல் முதலானவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது எப்படி பயங்கரவாதக் குற்றங்களாகும்? ஆயுதம் தயாரிப்பது, வெடிமருந்து சட்டத்தின் கீழான குற்றங்கள் முதலானவை ஏற்கனவே மாநில அரசின் விசாரணை வரம்புக்குள் உள்ளன.

ADVERTISEMENT

இந்த சட்டத் திருத்தத்தின்மூலம் தற்போது மாநிலப் பட்டியலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை அரசியல் சாசனத்துக்கு எதிராக மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது. மாநிலங்களிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கும் அதிகாரத்தையும் இந்த சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அளிக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு இந்த அமைப்பை உருவாக்கியபோது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) சட்டத்தின்படி பயங்கரவாதச் செயல் ஒன்று நிகழுமேயானால் உடனடியாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் அந்த வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். அதுகுறித்த விவரங்களை மாநில அரசுக்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். மாநில அரசு இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் அதன் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு அந்த அமைப்பு இதுபற்றிய விசாரணையை மேற்கொள்ளும். சம்பவம் அவ்வளவு தீவிரமானதாக இல்லையென்றால் மாநில அரசின் காவல்துறையே அதை விசாரிக்குமாறு தேசிய புலனாய்வு அமைப்பு கேட்டுக்கொள்ளும் என வரையறுக்கப்பட்டது.

இப்போது அதன் வரம்பு விரிவுபடுத்தப்பட்டு மாநிலங்களின் உரிமையில் கை வைப்பது கண்டனதுக்குரியது. இன்னும் கொஞ்ச காலத்தில் அடிதடி, திருட்டு வழக்குகளைக்கூட இந்த அமைப்புத்தான் விசாரிக்கும் என்று சொல்லவும் வாய்ப்பு உண்டு.  சி.பி.ஐ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டுமென்றால் அதற்கு மாநில அரசின் சம்மதத்தை பெற்றாக வேண்டும். மாநில அரசு சம்மதிக்காவிட்டால், சி.பி.ஐ. எந்த வழக்கையும் தலையிட்டு விசாரிக்க முடியாது.

ஆனால் இந்தச் சட்டமோ மாநில அரசை வெறும் தபால்காரர் போல் மாற்றிவிட்டது. வழக்கை விசாரிப்பதற்கு மாநில அரசின் சம்மதம் இருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை. மாறாக மாநில அரசு மத்திய புலனாய்வு அமைப்பிடம் தகவல் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இதுவரையில் உள்ள சட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அம்சமாக இந்த சட்டம் உள்ளது.

இந்தச் சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றம் முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் நியமிப்பது, அந்த நீதிமன்றத்துக்கான அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்கும். இந்த சிறப்பு நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டுமென்றால் உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சுக்குதான் செல்ல வேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது.

எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து போராடி முறியடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT