மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழக மக்களிடம் பாஜகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை என்பது தொடர்ந்து வருகிறது. இச்சூழலில் மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண தேசிய அளவில் ஒரே தீர்ப்பாயம் அமைப்பது சிறந்த முடிவாக இருக்கும். தமிழகத்தைப் பொருத்தவரை காவிரி பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுவதாகக் கூறுகிறீர்கள். தமிழகத்தில் ஒரு மாணவர்கூட இல்லாமல் 1,500 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேநேரம், 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து போனதால் தனியார் பள்ளிகளைத் தேடிச் செல்கின்றனர். கடந்த 20 ஆண்டுகால ஆட்சியில் அரசுப் பள்ளிகள் மீது கவனம் செலுத்தாத காரணத்தால் ஏற்பட்ட விளைவு இது.
எனவே, தமிழக அரசு கல்வி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அரசுப் பள்ளிகளின் நிலை, தனியார் பள்ளிகளின் விவரம், அவை யாரால் நடத்தப்படுகிறது என்ற விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உண்மையில் மாணவர்களின் நலனுக்காக மொழிக் கொள்கை பற்றி பேசுவதில்லை. மொழி என்ற பெயரால் தமிழக மக்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறதே?. திமுக ஆட்சிக்கு வந்தால், அந்தப் பள்ளிகளை மூடிவிடுமா?. மொழி கொள்கை விஷயத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடகமாடி வருகின்றன. குறிப்பாக, மொழி கொள்கை என்ற பெயரில் மக்களிடம் பாஜகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.
அதேநேரம், காங்கிரஸ் கட்சியை தமிழர்களுக்கு அனுசரணையான கட்சியாக வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், இப்போது கொண்டாடப்படுகிறார். அவர் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா?
மதிமுக பொதுச் செயலர் வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார். அவர், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டதை தமிழகத்தின் பட்டி, தொட்டிகள் எல்லாம் பேசி வந்துள்ளார். அப்பாவித் தமிழர்கள் 1.5 லட்சம் பேர் கொல்லப்பட்டார்களே அதற்கு எந்த அரசு துரோகம் செய்தது என்பது குறித்து மாநிலங்களவையில் அவர் பேச வேண்டும். இது நிறைவேறினால், அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது பொருள் நிறைந்ததாக இருக்கும்.
தபால் துறை தேர்வை தமிழில் எழுத 2016-இல் பாஜக அரசு தான் அனுமதி அளித்தது. ஆனால், அதில் தவறுகள் நடந்ததால் தற்போது சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், இவ்விஷயத்தில் குழப்பவாதிகளால் தேவையற்ற சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.