கோவை: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் விற்பனை கண்காணிப்புக் குழுக்கள் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் எழுப்பும் புகார்கள் முறையாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. மேலும், பொருள்கள் கள்ளச்சந்தையில் விற்பதை தடுப்பதற்கும் தீர்வு ஏற்படவில்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, அடித்தட்டு மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்கள் கிடைக்க பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 34,773 நியாய விலைக் கடைகளின் கீழ், 2 கோடியே 42 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் மானிய விலையில் நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் விற்கப்படுகின்றன.
தமிழகத்தில் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும், மற்ற பொருள்கள் மானிய விலைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் நியாய விலைக் கடைகளில் உரிய அளவில் பொருள்கள் வழங்கப்படுவது இல்லை.
இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு 2013-ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதில் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சரியான அளவு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணிக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் மாவட்டம், கோட்டம், வட்டம், நியாயவிலைக் கடை அளவிலும் கண்காணிப்புக் குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் இதற்கான அரசாணை 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அதன்படி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், கோட்ட அளவில் கோட்டாட்சியர் தலைமையிலும், வட்ட அளவில் குடிமைப்பொருள் வட்டாட்சியர் தலைமையிலும், நியாய விலைக் கடைகளில் 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன.
நியாய விலைக் கடைகளில் அமைக்கப்பட்டுள்ள குழு வார இறுதி நாள்களில் கூட்டம் நடத்தி அந்த வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொருள்கள், பொதுமக்கள் புகார் குறித்து விவாதித்து குடிமைப்பொருள் வட்டாட்சியரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.
அதேபோல் வட்டம், கோட்டம் அளவில் மாதம் ஒரு கூட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு கூட்டம் நடத்தி, மாநில கண்காணிப்பு ஆணையத்திடம் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு சார்பில் ஆண்டுக்கு ஒரு கூட்டம் என்ற அளவில் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதன்பின், கண்காணிப்புக் குழுக்கள் செயல்படாமல் முடங்கிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
இதனால் பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு உரிய அளவில் பொருள்கள் கிடைப்பதில்லை. ரேஷன் அரிசி கடத்தல், கள்ளச் சந்தைகளில் பொருள்கள் விற்பனை போன்றவையும் தொடர்கின்றன.
இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்களை முறைப்படுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் நா.லோகு கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கோட்டம், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் கூட்டம் இரண்டு ஆண்டுகளில் 2 முறை நடத்தப்பட்டுள்ளது. கோட்டம், கடைகள் அளவிலான குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ட முதலே முடங்கியுள்ளன. கடைகள் அளவிலான குழுக்களில் உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி, அவர்களுக்கு வேண்டிய நபர்களை குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளனர். கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியல்களும் கடைகளில் வைக்கவில்லை. மேலும் 2017-ஆம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. எனவே புதிய குழுவில் பொதுநல நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வலர்களை நியமித்து, மாதந்தோறும் கூட்டம் நடத்தி, குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறியதாவது:
மக்களவைத் தேர்தலுக்குப்பின் தற்போதுதான் அனைத்துத் துறைகளிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது விநியோகத் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்களில் யார், யார் நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் பதவிக் காலம் குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நிலவும் குளறுபடிகளைத் தவிர்த்து அனைவருக்கும் சரியான அளவில் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும். உணவுப் பொருள்கள் கடத்தல் குறித்தும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புகார் அளிப்பது தொடர்பான அறிவிப்பு பலகை இல்லை
நியாய விலைக் கடைகளில் பொது விநியோக திட்டத்தில் உரிய அளவு உணவுப் பொருள்கள் வழங்காதது, வெளிச்சந்தைகளில் விற்பனை செய்வது தொடர்பாகப் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-5901 மற்றும் 1907 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவிப்புப் பலகை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான கடைகளில் புகார் எண் குறித்த அறிவிப்புப் பலகை வைக்கப்படவில்லை. இதனால் புகார் தெரிவிக்க எண்கள் இருப்பதே மக்களுக்கு தெரியாத நிலை காணப்படுகிறது.
-ம.முனுசாமி