தமிழக முதல்வரின் நேர்முக உதவியாளர் எனக் கூறி மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியவர் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மதுரை கோட்டாட்சியர் ஆகியோருக்கு சனிக்கிழமை தொலைபேசியில், பேசிய ஒருவர், தமிழக முதல்வரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர் பேசுவதாகக் கூறி, மதுரையில் நடைபெறும் திருமணத்திற்கு வந்துள்ளதாகவும், தனக்கு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அறை வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து, அவருக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 3-ஆம் எண் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் நேர்முக உதவியாளர் என கூறியவர், சனிக்கிழமை இரவு தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.
மதுரை வடக்கு வட்டாட்சியர் செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஸ்குமாரை அழைத்துக் கொண்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, தங்கியிருந்த நபர் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் தல்லாகுளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீஸார் அங்கு வந்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அந்த நபர் தமிழக முதல்வரின் நேர்முக உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டதும், அவர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா, கணியூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் உதவி காவல் ஆணையர் மலைச்சாமி தலைமையில் தல்லாகுளம் போலீஸார் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சந்தோஷ்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கும், முதல்வருக்கு உறவினர் என்றும், வேளாண்மை துறை அமைச்சரின் மகனின் நண்பர் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்தோஷ்குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.