தமிழ்நாடு

சென்னையில் மீன்வள பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு: அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

15th Jul 2019 01:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வெவ்வேறு பட்டப்படிப்புகளுக்கான 2019-20-ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை வாணியஞ்சாவடியிலுள்ள மீன்வள முதுகலைப் பட்ட மேற்படிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 இந்தக் கலந்தாய்வை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
 கடந்த ஆண்டுடன் (4,844) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு (6,074) ஏறத்தாழ 1,230 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
 முதல் நாள் நடைபெற்ற இளநிலை மீன்வளப் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (60 இடங்கள்), பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (60 இடங்கள்) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (40 இடங்கள்) ஆகிய மூன்று கல்லூரிகளில் மொத்தம் உள்ள 168 இடங்களுக்கு 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன.
 இந்தக் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தொழிற்பிரிவில் பயின்றவர்கள், மீனவர்களின் குழந்தைகள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆகிய சிறப்பு பிரிவுகளின் கீழ் இட ஓதுக்கீடு வழங்கப்பட்டது.
 இளநிலை மீன்வளப் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வில் முதல் மூன்று இடங்களுக்கான சேர்க்கை ஆணையை அமலா நிவி, மனோ ஸ்டெபி, ஜெஸி நந்திதா ஆகியோருக்கு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலர் கே.கோபால், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஃபெலிக்ஸ், பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT