சுதந்திரப் போராட்ட தியாகி பொல்லான் நினைவு நாளை கடைப்பிடிக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர், அரச்சலூர் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் நல்லமங்கலப்பாளையத்தைச் சேர்ந்த என்.ஆர்.வடிவேல் தாக்கல் செய்த மனுவில், "ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து தீரன் சின்னமலை போராடினார். இவரது படையில் படைத்தளபதியாக இருந்தவர் பொல்லான். ஆங்கிலேயர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இவர், நல்லமங்கலப்பாளையத்தில் தூக்கிட்டு கொல்லப்பட்டார். தீரன் சின்னமலைக்கு விழா எடுக்கும் தமிழக அரசு, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பொல்லானுக்கு அரசு விழா எடுப்பதில்லை. இதனால் அப்பகுதியினர் அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து நினைவு நாளைக் கடைப்பிடித்து வந்தனர். அண்மைக் காலங்களில் நினைவு நாளைக் கடைப்பிடிக்க அரச்சலூர் போலீஸார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். வரும் ஆடி மாதம் 1-ஆம் தேதி (ஜூலை 17) பொல்லான் நினைவு நாள் வருகிறது. எனவே நினைவுநாளை கடைப்பிடிக்க அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு திங்கள்கிழமைக்குள், ஈரோடு மாவட்ட ஆட்சியர், அரச்சலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தார்.