நகர் புறப் பகுதிகளில் கிடைக்கும் தரமான மருத்துவ சிகிச்சை, கிராமப்புற மக்களுக்கும் சென்றடைய தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு அவசியம் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரை நெல்சன்மாணிக்கம் சாலையில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மருத்துவமனையைத் திறந்து வைத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியர்களின் சராசரி வாழ்நாள் 69 வயதாக உயர்ந்துள்ளதுடன், பச்சிளங்குழந்தைகள் மற்றும் பிரசவகால இறப்பு விகிதங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன.
மத்திய அரசின் நீதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார குறியீடுகளின்படி, தென்மாநிலங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பது வரவேற்புக்குரியது.
தொற்று நோய்கள் ஒழிக்கப்பட்டாலும், மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை போன்ற தொற்றா நோய்களால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் 2017- ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரப்படி, நமது நாட்டில் ஏற்படும் மரணங்களில் 61 சதவீதம் தொற்றா நோய்களால்தான் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறது.
சுகாதாரத் துறைக்கான நிதிப் பற்றாக்குறை, மருத்துவர் மற்றும் நோயாளிகளுக்கு இடையிலான விகிதாசாரக் குறைவு, மக்கள் தங்கள் வருமானத்தை மீறி மருத்துவத்துக்குச் செலவு செய்ய வேண்டிய நிலை, சுகாதார காப்பீட்டுத் திட்டம் அதிக மக்களைச் சென்றடையாதது போன்றவை சவால்களாக உள்ளன.
6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை: தற்போதைய நிலையில், நாட்டில் 6 லட்சம் மருத்துவர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். தரமான மருத்துவ சிகிச்சைகள் குறைவான கட்டணத்தில் கிடைக்க தனியார் துறையினர் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். நகர்ப்புறப் பகுதிகளில் கிடைக்கும் மருத்துவ வசதிகள் கிராமப் பகுதிகளுக்குச் சென்றடையவில்லை. இந்தக் குறைபாட்டைப் போக்க தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு மிக அவசியம்.
தரமான மருத்துவர்கள் மற்றும் குறைவான செலவு காரணமாக வளர்ந்த நாடுகளைவிட இந்தியா முன்னேறி வருகிறது. அதிக அளவிலான வெளிநாட்டவர் சென்னைக்கு சிகிச்சைக்காக வருவது, மருத்துவத் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதைக் காட்டுகிறது என்றார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று பேசும்போது, மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தனர். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் மருத்துவமனை மேலாண் இயக்குநர் எம்.கே.ராஜகோபாலன், இயக்குநர் மருத்துவர் பிரசாந்த் ராஜகோபாலன், முதன்மைச் செயல் அதிகாரி டாக்டர் ராகுல் ஆர்.மேனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
12 சிறப்பு சிகிச்சை மையங்கள்: எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவும், 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் உள்ளன. 250-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 900-த்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், இதய சிகிச்சை, நரம்பியல், எலும்பு, சிறுநீரகம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிகிச்சை, குழந்தைகள் சிறப்பு பிரிவு என 12 சிறப்பு சிகிச்சை மையங்கள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 55 அறைகள் உள்ளதாக மருத்துவமனை மேலாண் இயக்குநர் எம்.கே.ராஜகோபாலன் தெரிவித்தார்.