தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ். இடத்தைக் கைவிடும் 20 மாணவர்கள்: பொறியியலில் சேர முடிவு முதல் சுற்று முடிவில் 6,740 பேருக்கு ஒதுக்கீடு

15th Jul 2019 02:08 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்று எம்.பி.பி.எஸ். இடத்தைத் தேர்வு செய்த 20 பேர், அதை ஒப்படைத்துவிட்டு பொறியியல் படிப்பில் சேர முடிவு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.
 அதுபோல, பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்திருந்த 26 பேர், அதைக் கைவிட்டு மருத்துவப் படிப்புகளில் சேர்ந்திருக்கின்றனர். பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வை நான்கு சுற்றுகளாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை இடங்களைத் தேர்வு செய்து, ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்த 6,740 மாணவ, மாணவிகளுக்கு இறுதி ஒதுக்கீட்டை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சனிக்கிழமை வெளியிட்டது.
 இந்த முதல் சுற்றுக்கு 9,872 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 3,132 பேர் இடங்களைத் தேர்வு செய்வதையும், தேர்வு செய்த இடத்தை உறுதி செய்வதையும் தவிர்த்துள்ளனர்.
 எம்.பி.பி.எஸ். இடத்தைக் கைவிடும் 20 பேர்: பொறியியல் கலந்தாய்வில் முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்த 26 மாணவர்கள், அதைக் கைவிட்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
 அதுபோல, மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்த 20 மாணவ, மாணவிகள், முன்னதாக பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்று தேர்வு செய்த இடங்களையும் உறுதி செய்துள்ளனர். இந்த 20 மாணவர்களுக்கும் பி.இ. இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் இந்த 20 பேரும் அவர்களுடைய எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு உத்தரவை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் கல்லூரி சேர்க்கை உத்தரவைப் பெற்றுச் செல்வர் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இரண்டாம் சுற்று: அதுபோல, ஜூலை 13-ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்ட 21,054 பேரில் பாதிக்கும் குறைவானவர்களே முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர். இவர்களில் 6,500 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் இடங்களைத் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.
 முதல் சுற்றில், முன்வைப்புத் தொகையைச் செலுத்தி இடங்களைத் தேர்வு செய்யத் தவறியவர்கள், இந்த இரண்டாம் சுற்றில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதற்கிடையே மூன்றாம் சுற்று மாணவர்களுக்கான முன்வைப்புத் தொகையைச் செலுத்துவதற்கான காலம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இவர்கள் ஜூலை 17 வரை கட்டணம் செலுத்தலாம். ஜூலை 18 முதல் 20-ஆம் தேதி வரை இந்தப் பிரிவு மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT