21 ஜூலை 2019

நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி: வைகோ கண்டனம்

DIN | Published: 13th July 2019 02:19 AM


மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், அதை மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மதிமுக கடுமையாக எதிர்க்கும் என அதன் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தால், தேனி மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழாகும். அதனுடன் கடுமையான கதிரியக்க ஆபத்தும் ஏற்படும்.  முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளும், யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்த பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலமான', மேற்குத் தொடர்ச்சி மலையும், மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவும் நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரத்திற்கு அருகே உள்ளன. எனவே, இத்திட்டத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தேசிய வனவிலங்கு வாரியம் உள்ளிட்டவற்றின் அனுமதி பெற வேண்டும்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்' தென்னக அமர்வு 2017-இல் ரத்து செய்துள்ளது. ஆனால், இதனைப் பொருட்படுத்தாத மத்திய அரசு, நியூட்ரினோ திட்டத்தைச் சிறப்புத் திட்டமாக', பிரிவு ஆ' திட்டமாக அறிவித்து, எல்லா தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சட்டங்களை மீறி முடிவு எடுத்தது.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசின் தலைமைச் செயலரைப் பொறுப்பாளராக நியமித்து, நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் நியூட்ரினோ தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கருத்தில் கொள்ளாமல், அனுமதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி இருப்பது கண்டனத்துக்குரியது.
மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், அதை மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மதிமுக கடுமையாக எதிர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய கம்யூ., பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு: ஸ்டாலின் வாழ்த்து 
அத்திவரதர் வைபவத்தில் 5 ஆயிரம் போலீஸார்: டிஜிபி திரிபாதி
நவம்பர் 1 -ஆம் தேதி தமிழ்நாடு தினம்: கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி வரவேற்பு 
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: ஈஆர்.ஈஸ்வரன்
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்