செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மாநிலங்களவைத் தேர்தல்: ஆறு பேர் போட்டியின்றி தேர்வு

DIN | Published: 12th July 2019 04:31 AM


மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த  தலா மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். 
ஆறு பேரும் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் வியாழக்கிழமை நேரில் அளித்தார்.
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம், வரும் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
 இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, கடந்த 1-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
திமுக சார்பில், எம்.சண்முகம், பி.வில்சன் ஆகியோரும், திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக சார்பில் வைகோ, அதிமுக சார்பில் என்.சந்திரசேகரன், முஹம்மத் ஜான், அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 
இதனிடையே, தேச துரோக வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் சட்டப் பேரவைச் செயலகம் விளக்கம் கோரியது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைத் தொடர்ந்து, வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதையடுத்து, திமுக சார்பில் மூன்றாவது வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை புதன்கிழமை வாபஸ் பெற்றார்.


இறுதியாக 6 பேர் மட்டுமே களத்தில் இருந்ததால், 6 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
வெற்றிச் சான்றிதழ்: போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக, அதிமுக, பாமக, மதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் வியாழக்கிழமை அளித்தார். இந்தச் சான்றிதழை தில்லி சென்று மாநிலங்களவைச் செயலகத்தில் வழங்கி, ஆறு பேரும் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொள்வர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அண்ணாமலை பல்கலை.யில் 2021-இல் உலகத் தமிழ் மாநாடு
பைக்காரா படகு இல்லத்தில் மிதவை படகு தளம் புதுப்பிக்கப்படும்
2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு
காணாமல்போன மீனவர்கள்: மத்திய, மாநில அரசுகள்  அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா