தமிழ்நாடு

நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்படும்: துணை முதல்வர்

12th Jul 2019 01:27 AM

ADVERTISEMENT


திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது: அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றவர், நாவலர் என அழைக்கப்படும் நெடுஞ்செழியன். 1953-இல் அவரின் பேச்சைக் கேட்டுத்தான் திமுகவுக்கே வந்தேன். கருணாநிதி, அண்ணாவின் பேச்சுகளுக்கு முன்பு நெடுஞ்செழியனின் பேச்சைத்தான் கேட்டேன். (நெடுஞ்செழியன் பேசுவதைப்போலவும் அவையில் துரைமுருகன் பேசிக் காட்டினார். 
இதற்கு அதிமுக உறுப்பினர்களும் கைதட்டினர்) தம்பி வா, தலைமையேற்க வா என்று அண்ணாவாலேயே அழைக்கப்பட்டவர். அவரின் நூற்றாண்டு விழா என்பது அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று. திராவிட இயக்கக் கொள்கையை கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர்.  அவரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றார்.
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கூறியது: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறியதை அப்படியே ஆமோதிக்கிறேன். நடமாடும் பல்கலைக்கழகம் என அனைவராலும் போற்றப்பட்டவர் நெடுஞ்செழியன். அவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக ஒரு நாள் கொண்டாடப்படும். இது தொடர்பாக முதல்வரும், நானும் ஆலோசித்துள்ளோம். அந்த விழாவில், நெடுஞ்செழியனின் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையிலான ஓர் அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT