தமிழ்நாடு

நெகிழிக்குத் தடை: அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்: ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தல்

12th Jul 2019 02:58 AM

ADVERTISEMENT

நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதித்து கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், ஆவின் பாலை பாட்டில்களில் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு நெகிழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த ஜனவரி 1- ஆம் தேதி முதல் தமிழகத்தில் நெகிழிப் பைகள் உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என தமிழக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு  ஜூன் 25-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. நெகிழிப் பைகளுக்கு தமிழக அரசு தன்னிச்சையாக தடை விதிக்க அதிகாரம் இல்லை. மத்திய அரசின் நெகிழிப் பொருள்கள் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட வில்லை. மேலும் இந்த முடிவை எடுப்பதற்கு முன், அறிவியல் பூர்வமான ஆய்வுகளை அரசு மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு 50 மைக்ரான்களுக்கு குறைவான தடிமன் கொண்ட நெகிழிப் பைகளுக்குத் தான் தடை விதித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில் எத்தனை மைக்ரான்களுக்கு குறைவான நெகிழிப் பைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்ற விவரங்கள் எதுவும் இல்லை.  எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. 
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர். அதில், பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், மாசற்ற காற்று கிடைக்க வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே நெகிழிப் பொருள்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. 
அத்தியாவசியப் பொருள்கள் என்பதால், பால், மருந்து, எண்ணெய் உள்ளிட்டவைகளை நெகிழிப் பைகளில் அடைத்து விற்பனைச் செய்ய விலக்களிக்கப்பட்டுள்ளதாக  அரசு தரப்பில் கூறும் கருத்தை ஏற்க முடியாது. எந்தச் சூழலிலும் அரசு இதுபோன்ற கருத்தைச் சொல்லக்கூடாது. மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து வகையான நெகிழிப் பொருள்களுக்கும் தடை விதித்தால் மட்டுமே அந்த நோக்கம் நூறு சதவீதம் நிறைவேறும்.
எனவே, தமிழக அரசு ஆவின் பாலை நெகிழிப் பைகளில் விற்பனைச் செய்வதற்கு பதிலாக கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்பனைச் செய்ய வேண்டும் அல்லது மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். நெகிழித் தடை உத்தரவை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் சந்தையில் எளிதாகக் கிடைத்தால், தமிழக அரசின் இந்த உத்தரவு வெறும் காகித உத்தரவாகவே இருக்கும். 
எனவே, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள், விநியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் பெரும் தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். இதை கடைப்பிடிக்காவிட்டால் தடை உத்தரவு அர்த்தமற்றதாகி விடும். அறிவியல் ஆய்வுகளின்படி நெகிழி மக்குவதற்கு நூறு ஆண்டுகளாகும் எனத் தெரிய வந்துள்ளது. இந்த நெகிழியை உண்பதால், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பலியாகின்றன. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழியை விடுத்து, துணி, சணல், உள்ளிட்டவைகளைப் பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது.  மேலும், 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு மட்டுமின்றி, சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து நெகிழிப் பொருள்களுக்கும் அரசு தடை விதிக்க வேணடும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உறுதி செய்து, இந்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT