தமிழ்நாடு

கோவையில் மின்சாரப் பேருந்து சேவை:  வழித்தடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு 

12th Jul 2019 07:54 AM | கோவை

ADVERTISEMENT

கோவை கோட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை  உள்ளிட்ட  மக்கள் நெரிசல் நிறைந்த மாநகரங்களில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிப்ரவரியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சி 40 பன்னாட்டு நிறுவனத்துக்கும், போக்குவரத்துக் கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மின்சாரப் பேருந்துகளை இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மண்டலங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்துக்கு முதல் கட்டமாக 20 மின்சாரப் பேருந்துகள் வர உள்ளன. இந்தப் பேருந்துகளை எந்தெந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 
இதுகுறித்து கோவைக் கோட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென போக்குவரத்துக் கழகம் சார்பில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ள வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு முடிவடைந்த பிறகு வழித்தட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அரசின் ஒப்புதல்  பெற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT