தமிழ்நாடு

எம்.பி.க்களுக்கான கடிதங்களை ஆங்கிலத்திலும் அளிக்க வேண்டும்: மக்களவைத் தலைவரிடம் விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

12th Jul 2019 02:14 AM

ADVERTISEMENT


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களை ஹிந்தியில் மட்டுமே அனுப்பாமல் ஆங்கிலத்திலும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அளித்துள்ளார்.
மக்களவைத் தலைவரிடமிருந்து வியாழக்கிழமை காலை மக்களவை உறுப்பினர்களுக்கு தனித் தனியாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சி குறித்த அந்தக் கடிதம், ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. இக்கடிதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும், விழுப்புரம் தொகுதியின் உறுப்பினருமான ரவிக்குமாருக்கும் கிடைக்கப் பெற்றது.
 இதையடுத்து, மக்களவையில் வியாழக்கிழமை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து ரவிக்குமார் கடிதத்தை அளித்துள்ளார். அதில்,  உங்கள் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றது. அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 
ஏனெனில், அது ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. ஆகவே, எதிர்காலத்தில் உங்கள் கடிதங்களை ஆங்கில வடிவத்திலும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், மக்களவைத் தலைவரிடமிருந்து அனைத்து உறுப்பினர்களுக்கும் வியாழக்கிழமை காலை தனிக் கடிதம் வந்தது. அது ஹிந்தியில் இருந்ததால் ஒன்றும் புரியவில்லை. இதனால், அவை நடந்த போது இது தொடர்பாக கடிதம் அளித்தேன். 
ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கடிதம் தருவது வழக்கம். இது சட்ட ரீதியாக நமக்குள்ள உரிமையாகும். ஆகவே, இரு மொழிகளிலும் கடிதம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்தக் கடிதத்தை அவைத் தலைவரிடம் அளித்துள்ளேன் என்றார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT