அறியாமையைப் போக்குவதுதான் புத்தகங்களின் சிறப்பு: என்எல்சி இந்தியா தலைமைச் செயல் இயக்குநர் ஏ. ரவீந்திரன்

அறியாமையைப் போக்குவதுதான் புத்தகங்களின் சிறப்பு என்று என்எல்சி இந்தியா தலைமைச் செயல் இயக்குநர் ஏ.ரவீந்திரன் கூறினார்.
நெய்வேலி 22-ஆவது புத்தகக் கண்காட்சியின் 5-ஆம் நாள் விழாவில், தினமணி மற்றும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய  சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுடன்  தினமணி ஆசிரியர் 
நெய்வேலி 22-ஆவது புத்தகக் கண்காட்சியின் 5-ஆம் நாள் விழாவில், தினமணி மற்றும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய  சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுடன்  தினமணி ஆசிரியர் 


அறியாமையைப் போக்குவதுதான் புத்தகங்களின் சிறப்பு என்று என்எல்சி இந்தியா தலைமைச் செயல் இயக்குநர் ஏ.ரவீந்திரன் கூறினார்.
 கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் 22-ஆவது புத்தகக் கண்காட்சியின் 5-ஆம் நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின் துறை தலைமைச் செயல் இயக்குநர் ஏ.ரவீந்திரன் பேசியதாவது: 
 நெய்வேலி புத்தகக் கண்காட்சியானது அகக் கண்காட்சியாக அமைய வேண்டும். எழுத்தறிவித்தவன் இறைவன். எழுத்தை அறிவிப்பதால்தான் மனிதனின் அறிவு வளர்கிறது. நமக்குள் அறிவுப் பயிர் வளர்வதற்கு நூல் என்ற தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். கல்விதான் நற்பண்புகளை வளர்க்கிறது. அறிவும், உயிரும் ஒன்றுதான். 
கல்லாதவர்களை விலங்குகளுடன் ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். அரிய நூல்களைப் படித்தால் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்கிறார் திருமூலர். மனிதர்களின் அறியாமையைப் போக்குவதுதான் புத்தகங்களின் சிறப்பு. இதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன என்றார் அவர்.
கோவை ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குநர் கவிதாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: 
மனிதர்கள் பணம், பதவியை நோக்கி ஓடுகின்றனர். வாழ்வில் மகிழ்ச்சி எவ்வாறு கிடைக்கிறது? செய்யும் வேலை பிடித்திருந்தால் 60 சதவீத மகிழ்ச்சி கிடைக்கிறது. குடும்பச் சூழலால் 30 சதவீத மகிழ்ச்சியும், பணத்தால் 10 சதவீத மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
 மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதும் புத்தகங்கள்தான். குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியம். குழந்தைகளுக்கு நல்ல நடத்தை, துணிச்சல், தனித் திறன், நேரம் தவறாமை, கற்பனைத் திறன் ஆகிய 5 பண்புகளை கற்றுத் தர வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்வதால் மகிழ்ச்சி ஏற்படும். இவற்றை கற்பிப்பவை புத்தகங்களே  என்றார் அவர்.
பரிசளிப்பு: இந்த நிகழ்ச்சியில், முதன்மை விருந்தினராக தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பங்கேற்று, தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டினார். கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். 
 விழாவில், வல்லம் கோவிந்தராசு என்ற மா.கோவி எழுதிய பூங்காவனம் என்ற நூலை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வெளியிட்டார். பாராட்டப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் எழுத்தாளர் அமராந்த்தாவுக்கும், பாராட்டப்படும் பதிப்பகத்தார் வரிசையில் சென்னை கே.எஸ்.எல். மீடியா நிறுவனத்தினருக்கும் பொற்கிழி, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
 தொடர்ந்து அறந்தாங்கி நிஷா, பழனி, அஸார் உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், என்எல்சி அதிகாரிகள்,  ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பரிசு பெற்றவர்கள்....

சிறுகதைப் போட்டி: 
முதல் பரிசு (ரூ.10,000) - கும்பகோணம், ஆதலையூரைச் சேர்ந்த சூரியகுமாரின், நிவேதா நீட் எழுதுகிறாள்.
இரண்டாம் பரிசு (ரூ.5,000) - விருத்தாசலம் அருகே ஊத்தங்கால் பகுதியைச் சேர்ந்த ப.கோவிந்தராசுவின்,  அவர் வருவாரா....
மூன்றாம் பரிசு (ரூ.2,500) - வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த நா.கோகிலனின் மாற்றொலி.
ஆறுதல் பரிசு (ரூ.1,250) பெறும் 5 சிறுகதைகள்: 
ஆரணியைச் சேர்ந்த பவித்ரா நந்தகுமாரின் பூரணியும், கொலு போட்டியும், திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்ராவின் வதை, நெய்வேலியைச் சேர்ந்த மு.பாண்டியனின் புரிதல், திருவாரூரைச் சேர்ந்த ரோஷிணி (எ) தீபப்பிரியாவின் அறம், தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசலைச் சேர்ந்த மா.இராமச்சந்திரனின் களத்துக்கடை கருத்தையா.
கட்டுரைப் போட்டி (பள்ளிகள் அளவில்):
முதல் பரிசு (ரூ.2,000) - மயிலாடுதுறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் சு.கலைவேந்தன். 
இரண்டாம் பரிசு (ரூ.1,500) - பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி 
ஜி.ஆனந்தி. 
மூன்றாம் பரிசு (1,000) - விருத்தாசலம் வி.இ.டி. மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி பா.சுவேதா.
கல்லூரி அளவிலான போட்டி: 
முதல் பரிசு (ரூ.2,000) - கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர் (பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் இணைபவர்) கு.சுனில் பிரசாத். 
இரண்டாம் பரிசு (ரூ.1,500) - மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரி மாணவி எம்.நீலா. 
மூன்றாம் பரிசு (ரூ.1,000) - சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவி ஜெ.கோகிலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com