செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிவு

DIN | Published: 09th July 2019 04:27 AM


இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கடும் சரிவு காணப்பட்டது. நடப்பு 2019-ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒரே நாளில் சென்செக்ஸ் 792 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
மத்திய நிதி அமைச்சர் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பங்குச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில் எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. 
மாறாக, நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக பங்குகளில் அவர்களின் கையிருப்பு விகிதத்தை தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்க  பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டது. அதுதவிர, அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கான வரியை அதிகரிப்பது, பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு கட்டணம் விதிப்பது உள்ளிட்ட  பங்குச் சந்தைக்கு சாதகமற்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கின. 
இதனால்,  திங்கள்கிழமை வர்த்தகத்தில் லாப நோக்கம் கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்தனர்.
வரும் காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி விகிதம் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும் என்ற முதலீட்டாளர்களின் நிலைப்பாடு பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 
சர்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலையும் இந்திய பங்குச் சந்தைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 8.18 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது. இதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி பங்கின் விலை 5.43 சதவீதமும்,  எல் & டி 4.3 சதவீதமும், எஸ்பிஐ 4.14 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 2.84 சதவீதமும் குறைந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகளுக்கும் சந்தையில் போதிய வரவேற்பில்லை.
மும்பை பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், மின்சாரம், வங்கி, எண்ணெய்-எரிவாயு , உலோகம், பொறியியல் சாதன துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 3.78 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 792 புள்ளிகள் (2.01%) சரிந்து 38,720 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 252 புள்ளிகள் (2.14%) குறைந்து 11,558 புள்ளிகளாக நிலைத்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னையில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் சாவு: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சங்கரன்கோவிலை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம்!
பேனர் விழுந்து இளம்பெண்  மரணம்:  அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு 
வாசகர்களே.. நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏதேனும் பிரச்னையா? புகைப்படம் எடுங்கள்; தினமணியுடன் பகிருங்கள்..
இந்தி திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் செப்டம்பர் 20-ஆம் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்