வனத்துறையில் பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:-
வனத்துறையின் கீழ் வரும் வனப் பகுதிகள் மற்றும் வன எல்லைகளைத் துல்லியமாக புவியிடங்காட்டி மூலமாக வரையறை செய்வதற்கான திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். வன விரிவாக்க மையங்களை விரிவுபடுத்தும் வகையில் கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர், சென்னை ஆகிய இடங்களில் செயல்பாட்டில் உள்ள 8 வன விரிவாக்க மையங்கள் நவீனப்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்படும்.
வன உயிரினங்கள் பற்றியும், வனத்தின் பயன்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள களக்காடு-முண்டந்துறை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய புலிகள் காப்பகங்களில் கருத்து விளக்கக் கூடத்துடன் கலைநயமிக்க சிறு கூட்ட அரங்குகள் நிறுவப்படும். வனப் பகுதியில் உள்ள சாலைகளைப் பராமரித்து மேம்பாடு த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிகழாண்டில் 577 கி.மீ. நீளமுள்ள வனச் சாலைகளில் ரூ.57.70 கோடியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் வன வளங்களைப் பாதுகாக்கும் பணியில் 1,119 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் வனத்துக்குள் மிகுந்த சிரமத்துக்கு இடையே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரத்து 500-ஆக உயர்த்தி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.