தமிழகத்தில் புதிதாக மேலும் 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110}ன் கீழ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கை:
புதிய சிமென்ட் சாலைகள்: தமிழகத்தில் கூடுதலாக அரிசி ஆலைகளை நிறுவிட அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலை நிகழாண்டில் நிறுவப்படும்.
எதிர்காலத்தில் உணவு தானியங்களை இருப்பு வைப்பதற்காக கூடுதலாக 36 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 28 கிடங்குகள் நிகழ் நிதியாண்டில் கட்டப்படும்.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கி வரும் கிடங்குகளின் வளாகத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளுக்குப் பதிலாக புதிய சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் காய்கறிகள், புளி, பழங்கள், பருப்பு வகைகள் போன்ற விவசாயப் பொருள்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க சூரியமின் சக்தியுடன் இயங்கக் கூடிய குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும்.
125 கூட்டுறவு நிறுவனங்கள்: தமிழகத்தில் 113 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 7 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் உள்பட 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். மேலும், 143 கூட்டுறவு நிறுவனங்களும், சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடமும் நவீனமயமாக்கப்படும். அரியலூர், புதுக்கோட்டை, தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மண்டலங்களில் 5 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் புதிதாக தொடங்கப்படும்.
மாநிலம் முழுவதும் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் 103 நியாயவிலைக் கடைகளில் திறக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் புதிதாக தொடங்கப்படும்.
விவசாயிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு 36 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 149 கிடங்குகள் நிகழாண்டில் புதிதாகக் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.