தமிழ்நாடு

சேலம் உருக்காலை விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் இணைந்து மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

6th Jul 2019 01:51 AM

ADVERTISEMENT


சேலம் உருக்காலை தனியார்மயமாவதைத் தடுக்க, தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரதமரிடமும், மத்திய அரசிடமும் நேரில் வலியுறுத்துவோம் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக, இதுகுறித்த வேண்டுகோளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்தார். இந்த அழைப்பை ஏற்கும் வகையில் முதல்வர் இவ்வாறு கூறினார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு,   சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்படுவது குறித்த பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்: 
சேலம் உருக்காலையைத் தனியாருக்கு வழங்கப்படக்கூடிய வகையில் உலகளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. சேலம் உருக்காலை திட்டம் என்பது, அண்ணாவின் கனவுத் திட்டம். நான்கு விரிவாக்கத் திட்டம் மூலம் சேலம் உருக்காலை இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் மாற்றான்தாய் போக்கினால் நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியது. 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களுடன் இருக்கக் கூடிய சேலம் உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக் கூடாது. 
இந்தப் பிரச்னை குறித்து முதல்வரே நேரடியாகச் சென்று பிரதமரைச் சந்தித்து அதற்கு அழுத்தம் தரவேண்டும். தேவையெனில், திமுக எம்.பி.க்களும் உங்களோடு வந்து அழுத்தம் தர காத்திருக்கிறார்கள். அதற்குரிய அனுமதியை நான் இப்பொழுதே தருகிறேன். 
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்: தமிழகத்தில் உள்ள எந்தவொரு பொதுத் துறை நிறுவனத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கவோ, விற்கவோ கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு. இப்போது சேலம் உருக்காலையைத் தனியாருக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம்.
மு.க.ஸ்டாலின்: முதல்வர் நேரில் சென்று தில்லியில் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் தர வேண்டும். தமிழகத்தின் சார்பில் திமுக-காங்கிரஸ் எம்.பி.க்களும்  உங்களோடு வந்து, அழுத்தம் தரச் சொல்வதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
முதல்வர் பழனிசாமி: சேலம் உருக்காலைப் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்களும் ஒன்றாகச் சேர்ந்து பிரதமரையும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரையும் சந்தித்து அழுத்தத்தைக் கொடுப்போம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தப் பிரச்னையை எழுப்பி அதைத் தடுப்பதற்குரிய ஆக்கப்பூர்வமான திட்டத்துக்கு தமிழக அரசும், அதிமுகவும் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT