தமிழ்நாடு

சிறுகாட்டூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் ஜூலை 8-ல் கும்பாபிஷேகம்

6th Jul 2019 01:03 AM

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே சிறுகாட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், செல்வ முத்துக்குமாரசுவாமி, தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயிலில் வரும் 8-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 1-ஆம் தேதி எஜமான அனுக்ஞையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 2-ஆம் தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தி ஆகியவை நடைபெற்றன. 3-ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன. 4-ஆம் தேதி மிருத்சங்கிரஹணம், பரிவார மூர்த்திகளுக்கு திரி பந்தனம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வரும் 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, தினமும் வேத பாராயணம், திருமறை பாராயணம், சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேக விழாவையொட்டி, 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை  நடந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் சிறப்புரையாற்றினார்.  6-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதனும், 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனும் சிறப்புரையாற்றுவர்.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகள் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. கோயில் நிர்மாணப் பணிகளை சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன் செய்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT