தமிழ்நாடு

அதிமுக எம்.பி. க்கள் வரவேற்பு

6th Jul 2019 01:39 AM

ADVERTISEMENT


உலக அரங்கில் இந்தியாவை முதலிடத்துக்குக் கொண்டு செல்லும் பட்ஜெட் என்று தேனி மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி. பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
உலக அரங்கில் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு செல்வதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பட்ஜெட் உதவும் என்பதால் வரவேற்கிறேன். இந்த பட்ஜெட்டில் இந்தியா 2020 நிதியாண்டில் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி பெறும் என்றும் 2022-க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் கிராமப்புறச் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க மானியம் வழங்கப்படும் என்றும் ரயில்வே திட்டங்களை மேம்படுத்த 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு; சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கடன் உதவி; வர்த்தகர்களுக்கு ஓய்திவூதியத் திட்டம்; அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி முதலீடு உள்ளிட்டவையும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, இந்த பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும், வரலாற்று சிறப்புமிக்க புறநானூற்றில் இருந்து வைர வரிகளை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமைச் சேர்த்த முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான, வளர்ச்சிக்கான நல்ல பட்ஜெட். ஏழை மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எந்தப் பாதிப்பும் இல்லை. விவசாயத்தைப் பொருத்தமட்டில் பூஜ்ய பட்ஜெட் எனும் முறையில் விவசாயத்தை இந்த அரசு ஊக்குவிக்கிறது. அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார். 
மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். அதேபோன்று, வீடு வாங்குவோருக்கு வட்டி செலுத்துவதற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என கூறியுள்ளார். சில்லறை வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் தருவற்கான திட்டத்தை அறிவித்துள்ளார். 
இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டம். மேலும், பட்ஜெட்டின்போது புறநானூறு பாடலில் இருந்து, பாண்டிய மன்னனுக்கு பிசிராந்தையார் வழங்கிய அறிவுரையை மேற்கோள்காட்டி தேவைக்கு அதிகமாக வரி விதிப்பு இருக்காது என பாடல் பாடி தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். 
வழக்கமாக ஏழைகள் யாரும் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துவதில்லை. வசதியுள்ளவர்கள் மட்டுமே பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி விதிப்பு அதிகம் எனக் கூற முடியாது என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT