தமிழ்நாடு

ரூ.13 கோடியில் 100 நெல் உலர்த்தும் களங்கள்: அமைச்சர் இரா.காமராஜ்

4th Jul 2019 01:39 AM

ADVERTISEMENT


விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ரூ.13 கோடியில் 100 நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் அறிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:
டெல்டா மற்றும் பிற மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலைய வாடகை கட்டடங்களுக்குப் பதிலாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளத்துடன் கூடிய 25 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் கட்டப்படும்.
டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயன்பாட்டுக்காக ரூ.13 கோடி மதிப்பீட்டில் 100 எண்ணிக்கையிலான நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இயந்திர கையாளுமை மற்றும் மூட்டை தைத்தல் போன்ற பணிகள் மின்தடையால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க ரூ.8 கோடி மதிப்பீட்டில் மின் ஆக்கிகள் நிறுவப்படும்.  வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்கும் வகையில் நில எல்லையில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள் கட்டப்படும்.
வாணிபக் கழகத்தில் பயன்பாட்டில் இருந்து வரும் கிடங்குகளில் பழைய கடப்பா கல் தரை அமைப்பினை மாற்றி ரூ.19 கோடி மதிப்பீட்டில் நவீன அமைப்பிலான சிமெண்ட் கான்கிரீட் தரை அமைக்கப்படும்.
 வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான 13 நவீன அரிசி ஆலைகளில் 25 ஆண்டுகள் பழைமையான பழுதடைந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. அவை சிமெண்ட் கான்கிரீட் தளத்துடன் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளாக ரூ.13 கோடி மதிப்பீட்டில் மாற்றியமைக்கப்படும்.
கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு தானியங்களைப் பாதுகாப்பாக சேமிப்பதற்கும் மற்றும் காற்றோட்டமான வசதிகள் அமைந்திடவும் 20 ஆயிரம் எண்ணிக்கையிலான மூட்டை இடைச்செரு கட்டைகள் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT