தமிழ்நாடு

முதல்வரின் பண்பாட்டை அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் : துரைமுருகன்

4th Jul 2019 01:37 AM

ADVERTISEMENT


முதல்வரின் பண்பாட்டை அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்று பேரவையில் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கூட்டுறவு மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் தனது பேச்சின் தொடக்கத்தில், கிருஷ்ணகிரி அணையின் 8 மதகுகளும் பாழடைந்துள்ளன. இதனால் தண்ணீர் வீணாகிறது என்று பேசிவிட்டு, கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறையில் உள்ள பிரச்னைகளை எழுப்பிப் பேசினார்.
இதற்கு, அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூவும்,  அமைச்சர் இரா.காமராஜும் இடையிடையே குறுக்கிட்டுப் பதில் அளித்து வந்தனர்.
இறுதியாக, திமுக உறுப்பினர் பேசி முடித்து அமர்ந்த பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசியது:
கிருஷ்ணகிரி அணை குறித்து திமுக உறுப்பினர் பேசினார். அவருக்கு அப்போதே பதில் அளிக்க வேண்டாம் என்று இறுதியாக அவர் பேசி முடித்த பிறகு பதில் அளிக்கிறேன். 8 மதகுகளில் ஒரு மதகு மட்டும் மிகவும் மோசமாக இருந்தது. அது மாற்றப்பட்டுவிட்டது. இதர மதகுகளையும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, முதல்வரின் பண்பாட்டையும், பெருந்தன்மையையும் அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்றார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, திமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி பேசும்போது, அதற்கு சுடச்சுட அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், திமுகவினர் பேசுவது மட்டுமே பத்திரிகைகளில் வரும் என்றார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ் எழுந்து, திமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகும்போது, அதற்கு பதில் அளிக்க வேண்டியதாகியுள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT