தமிழ்நாடு

பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

4th Jul 2019 01:43 AM

ADVERTISEMENT


சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப் பேரவையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து முதல்வர் பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கமளிக்க பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார். 
அப்போது, கர்நாடகத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக முதல்வர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விளக்கமளிக்க முயன்றனர். 
அதற்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்து விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
பேரவையில் இருந்து வெளியேறிய அவர்கள் லாபி வழியாக வந்து பேரவைத் தலைவரிடம் மீண்டும் முறையிட்டனர். ஆனாலும் அனுமதி மறுக்கப்படவே வெளியேறிச் சென்றனர். மொத்தமுள்ள ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே பேரவைக்கு புதன்கிழமை வந்திருந்தனர். பேரவை குழுத் தலைவர் ராமசாமி, மூத்த உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் பேரவைக்கு வரவில்லை.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT