தமிழ்நாடு

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றுவோருக்கு ஓய்வூதியம்: அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல்

4th Jul 2019 01:42 AM

ADVERTISEMENT


நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றுவோருக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் பேசியது: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றுவோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று திமுக ஆட்சியில், அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆனால், அதிமுக தற்போது ஆட்சியில் இருந்தும் இந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
அப்போது அமைச்சர் காமராஜ் குறுக்கிட்டுக் கூறியது: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றுவோருக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதுகுறித்து அரசு கவனத்துடன் பரிசீலித்து வருகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மொத்தம் 10 கழகங்கள் உள்ளன. இதில், ஏதாவது ஒரு கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்துவிட்டால், வேறுவிதமான பிரச்னைகள் வந்துவிடும். அதனால், 10 கழகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் வழங்க வேண்டும். எனவே ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசின் ஆய்வில் இருந்து வருகிறது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT