தமிழ்நாடு

தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த சிறப்பு நிதி ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும்: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

4th Jul 2019 01:44 AM

ADVERTISEMENT


தாமிரவருணி நதியைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.500 கோடியை ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் திருநெல்வேலி தொகுதி திமுக உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வலியுறுத்தினார். 
இது தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை பூஜ்யநேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை: திருநெல்வேலி தொகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றின் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக ரூ.500 கோடி சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டு தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரணி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நமாமி கங்கே திட்டத்தின் கீழ், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோன்று, தாமிரவருணி நதியையும் தூய்மைப்படுத்த வேண்டும். 252 குளங்களும், 24 ஆயிரம் ஹெக்டேர் நிலமும் பாசன வசதி பெறும் வகையில் தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்துக்கு ரூ.896 கோடி நிதி தேவையாக உள்ளது.
 ஜோதிமணி (கரூர்): கரூர் மாவட்டம் ஜவுளித் தொழிலுக்கு பெயர் பெற்றது. நாட்டில் நான்காவது மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி நகரமாகவும் உள்ளது. மேலும், பேருந்து வடிவமைப்பிலும், கொசு வலை உற்பத்தியிலும் முன்னிலையில்உள்ளது. ஏற்றுமதி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. இத்தொழிலில் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாவர். இந்நிலையில், அருகில் உள்ள நாடுகளின் போட்டி அதிகரிப்பு , சரக்கு சேவை வரி அவசர நிலையில் அமல்படுத்தியது ஆகியவை ஜவுளித் தொழில்துறையை பெரிய இடர்பாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளது. ஆகவே, சிறுகுறு தொழில் துறையில் ரூ.10 கோடி வரை விற்பனை உள்ள கூட்டாண்மை தொழில் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் வரி விகிதத்தை அரசு அறிமுகம் செய்ய வேண்டும்.
டி.ஆர். பாரிவேந்தர் (பெரம்பலூர்): பெரம்பலூர் தொகுதியில் சுமார் 70 சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழில் வளர்ச்சி குறைந்த பகுதியாக உள்ளது. ரயில் போக்குவரத்து இல்லாததால், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை பல்வேறு சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். அரியலூர் - பெரம்பலூர்-துறையூர் - நாமக்கல் ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில் திட்டம் நிறைவேற்றப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ரயில் வழித்தடம் இன்மையால் புதிய தொழிற்சாலைள் ஏற்படாத நிலை உள்ளது. 
ரயில் போக்குவரத்து ஏற்பட்டால் தொழிற்சாலைகள் பெருகி, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். எனவே, இந்த நான்கு பகுதிகளில் ரயில்வே இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT