தமிழ்நாடு

கொத்தடிமைகளாக இருந்த 5 சிறுவர்கள் மீட்பு

4th Jul 2019 01:47 AM

ADVERTISEMENT


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 5 சிறுவர்களை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனர்.
விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 5 பேர், கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு, உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் பகுதியில் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக, திருக்கோவிலூர் துணை ஆட்சியர் சாருஸ்ரீக்கு புகார் வந்தது. 
இதையடுத்து, சிறுவர்களை மீட்க அவர் பிறப்பித்த உத்தரவின்பேரில், உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் வேல்முருகன் தலைமையிலான தொழிலாளர் துறை ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சிறுவர்களின் உறவினர்கள் திருநாவலூர் அருகேயுள்ள மேட்டத்தூர் கிராமத்துக்கு புதன்கிழமை சென்றனர். அங்கு 5 சிறுவர்களும் இருநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். 
அதிகாரிகள் விசாரித்ததில், அந்த சிறுவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்த ராமு (13), விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (12), சக்திவேல் (14) கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(10), சின்னராசு (14), ஆகியோர் என்பதும், இவர்களை திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன், நெடுங்குணத்தைச் சேர்ந்த கோபி ஆகியோர் பணம் கொடுத்து, கொத்தடிமைகளாக ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த 5 சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருக்கோவிலூர் துணை ஆட்சியர் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT