தமிழ்நாடு

இளைஞரணிச் செயலாளராக உதயநிதி: இன்று அறிவிப்பு வெளியாகிறது

4th Jul 2019 02:53 AM

ADVERTISEMENT

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 4) அறிவிக்கப்பட உள்ளார். 
திமுகவின் வலுவான அமைப்புகளுள் ஒன்று இளைஞர் அணி.  இந்த அணி தொடங்கப்பட்டதில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையிலேயே செயல்பட்டு வந்தது. அதன் செயலாளராக மு.க.ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தார். 
தலைவராக இருந்த கருணாநிதியின் உடல்நலம் குன்றிய பிறகு, செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அதனால்,  இளைஞரணிச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதனை இளைஞரணிச் செயலாளராக நியமித்தார்.
உதயநிதி பிரசாரம்: மக்களவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் மகன்,  உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக உள்பட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவியைத் தர வேண்டும் என்று திமுகவின் மாவட்ட அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்பி வந்தன.
இதற்கிடையில், இளைஞரணிச் செயலாளர் பதவியை வெள்ளக்கோவில் சுவாமிநாதன் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 4) அறிவிக்கப்பட உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT