திமுக - காங்கிரஸ் காங்கிரஸ் உறவில் விரிசல்!

உறவுக்குக் கை கொடுக்கும் வகையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தது திமுக. அதில், காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 
திமுக - காங்கிரஸ் காங்கிரஸ் உறவில் விரிசல்!

உறவுக்குக் கை கொடுக்கும் வகையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தது திமுக. அதில், காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் மட்டுமே முன்மொழிந்து தேர்தலைச் சந்தித்தார். தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராகக் காணப்பட்ட மனநிலை காங்கிரஸுக்கு ஆதரவாக மாறியதால், திமுக கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி நீடிக்கும் என்றுதான் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், கூட்டணியில் விரிசல் ஏற்படக்கூடும் என்கிற சந்தேகத்தை சத்தியமூர்த்தி பவனில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெற்றக் கூட்டம் எழுப்பியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடந்த இந்தக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முயற்சிக்க வேண்டும். சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கின்றன. காங்கிரஸுக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவற்றில் 14 வார்டுகளை மட்டுமே திமுக  ஒதுக்கியது. 
இந்த முறை காங்கிரஸுக்கு கெளரவமான எண்ணிக்கையில் இடங்களை திமுக ஒதுக்கித்தர வேண்டும். அப்படித் தராமல் போனால், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும். இல்லையென்றால், தென்சென்னை மாவட்டத்தில் உள்ள 35 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிட என்னை அனுமதியுங்கள். 
அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுக் காட்டுகிறேன் என்று பேசினார். இதுபோல், அந்தக் கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக பல நிர்வாகிகள் பேசினார்கள் என்றாலும், கராத்தே தியாகராஜன் பேச்சு மட்டும் வெளியில் பரவியது. 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்கிவிட்டதாக திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பலர் கோபத்தில் இருந்து வரும் நிலையில், கராத்தே தியாகராஜனின் இந்தப் பேச்சு, திமுகவினருக்கு ஆத்திரத்தை மூட்டியது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி இல்லாமலேயே அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றிருக்கும் என்றும் காங்கிரஸ் சுமையே தவிர, பலமல்ல என்றும் பலரும் கருதுகிறார்கள்.
கராத்தே தியாகராஜன் கட்சிக் கூட்டத்தில் பேசிய பேச்சு திமுக தலைமையை எரிச்சலூட்டியதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதை வளரவிட்டால், காங்கிரஸ் தரப்புக் கோரிக்கை அதிகரிக்கக்கூடும் என்று திமுக பயப்படுகிறது. காங்கிரஸ் மட்டுமல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் அதிக இடங்களைக் கேட்க முற்படக்கூடும்.
முதல் எதிர்வினையாகத் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குடிநீர் பிரச்னை தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கே.என்.நேரு பேசும்போது, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஒருவர், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எப்போதுமே இப்படித்தான். தேர்தலுக்குப் பிறகு திமுகவையே எதிர்க்கும். முதல்வராக கருணாநிதி இருந்தபோது, திமுகவால் வெற்றிபெற்ற காங்கிரஸை சேர்ந்த செல்லக்குமார் சட்டப்பேரவையிலேயே திமுகவைக் குற்றம்சாட்டிப் பேசினார். இப்போது தனித்துப் போட்டி என்கின்றனர். எங்களுக்கும் ஒன்றுமில்லை. காங்கிரஸுக்கு எவ்வளவு நாள்தான் பல்லக்குத் தூக்க முடியும். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றார். 
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதை தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கே.என்.நேரு கூறிக் கொண்டாலும், காங்கிரஸுக்கு எதிரான அவருடைய கருத்து திமுக தலைமையின் கருத்துதான் என்பது அனைவருக்குமே தெரியும். உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒருசில இடங்களை மட்டுமே கொடுத்துவிட்டுப் பெரும்பான்மையான இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் என்கிற திட்டத்தை கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் தகர்த்துவிடக் கூடும் என்று திமுக தலைமை கருதுவதாகத் தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து என்று கராத்தே தியாகராஜன் கூறுவதன் பின்னணியில் வேறு ஏதேனும் அரசியல் இருக்குமோ என்கிற சந்தேகம் திமுக தலைமைக்கு இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளராக கராத்தே தியாகராஜன் இருந்து வருகிறார். ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால், தியாகராஜனும் அவர் பக்கம் செல்லக்கூடும் எனக் காங்கிரஸாரே தெரிவித்து வருகின்றனர். இதனால், ரஜினியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறாரோ, என்பதோடு இதை கராத்தே தியாகராஜனே செய்கிறாரா அல்லது காங்கிரஸ் தலைமையுடன் சேர்ந்து செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
காங்கிரஸ் தலைமையுடனும், இடதுசாரி கட்சிகளுடனும் நடிகர் கமல்ஹாசனுக்குத் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு இருப்பதால், புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு காணப்படுகிறது. தனித்துப் போட்டியிட்டு, அமைப்பு ரீதியாக பலமில்லாத நிலையிலும் கணிசமான வாக்குகளைக் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கும் நிலையில் அப்படியொரு கூட்டணி திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அமையக்கூடும்.
இந்தப் பின்னணியில்தான் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து என்று கராத்தே தியாகராஜன் குறிப்பிட்டதும், அது திமுகவை ஆத்திரமடைய வைத்திருக்கிறது. உள்கட்சிக் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் தெரிவித்த கருத்துக்கு திமுக தலைமை இந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்திருப்பதிலிருந்து , எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
 காங்கிரஸின் கூடுதல் இடங்கள் கோரிக்கையை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்பதால்தான் இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு திமுக புகார் தெரிவித்தது. இதையடுத்து திமுகவை குளிர்விக்கும் வகையில் கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து காங்கிரஸ் இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த இடைநீக்கத்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் முடிவுக்கு வருமா என்றால், உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் குழப்பம் தீர்வதற்கு வாய்ப்பு இல்லை எனலாம்.
உள்ளாட்சிப் பிரதிநிதி என்பவர்கள் அரசின் திட்டங்களையும், கட்சியின் செயல்பாடுகளையும் மக்களிடம் கடைசி வரை கொண்டுபோய் சேர்ப்பவர்கள். அதனால், உள்ளாட்சி அமைப்புகளில் கட்சியினரின் பங்களிப்பு அதிக அளவில் இருக்க வேண்டும் என்று திமுக தலைமை கருதுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளில் மேல்மட்ட நிர்வாகிகளே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுவதால்,  கீழ்மட்ட நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட  வைக்கக்கூடிய சூழல் இருந்து வருகிறது.
மேலும், கடந்த 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே திமுக இருந்து வருகிறது. அதனால், கட்சிக்குச் சொந்தப் பணத்தையே செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது என்ற ஒரு சலசலப்பும் கட்சியினரிடையே காணப்படுகிறது. இந்தக் காரணங்களால்  திமுக தலைமை உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே பெரிதும் முனைப்புக் காட்டி வருகிறது. 
அதனால், கராத்தே தியாகராஜனின் நீக்கத்தால் மட்டுமே திமுக சமாதானம் அடைந்துவிடும் எனக் கூற முடியாது. காங்கிரஸ் கட்சியிலும் சரி, கராத்தே தியாகராஜனின் மனநிலையில்தான் பலரும்  இருக்கிறார்கள். திமுக கூட்டணிக்குப் பின்பாட்டுப் பாடியபடி இப்படியே தொடர்வதால், ஒருசில இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு, நாளடைவில் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் காணாமல் போய்விடும். காங்கிரஸின் இடத்தை பாஜக பிடித்துவிடக் கூடும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கருதுகிறார்கள்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், திராவிடக்  கட்சிகளுக்கு மாற்றாகக் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடருமா, சட்டப்பேரவைத் தேர்தல்வரை தாக்குப் பிடிக்குமா என்கிற கேள்வியை எழுப்புகிறது, கராத்தே தியாகராஜனின் இடை நீக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com