ஆளுநர் என்பவரும் வரையறைக்கு உள்பட்டவர்தான். அந்த வரையறையை மீறி ஆளுநர் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.
சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி முதன்மை ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார், அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயகுமார் அளித்த பேட்டி:
ஜிஎஸ்டி பாக்கி மற்றும் ஈட்டுத் தொகையைப் பொருத்தவரை 3 முதல் 4 சதவீதம் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதில் ரூ. 1,000 கோடி பாக்கி வரவேண்டியுள்ளது. அதுபோல, இரு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தின் அடிப்படையில் தமிழகத்துக்குப் பிரித்தளிக்க வேண்டிய வரித் தொகை ரூ. 5,000 கோடி பாக்கியுள்ளது. அதன்படி, மத்திய அரசிடமிருந்து மொத்தம் ரூ. 6,000 கோடி தமிழகத்துக்கு வரவேண்டியுள்ளது. இந்த நஷ்ட ஈட்டை பாதுகாக்க சட்டம் இருப்பதால், இந்த முழுத் தொகையும் நமக்கு நிச்சயம் வந்துவிடும். ஒரே நாடு, ஒரு குடும்ப அட்டை என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதுகுறித்து தமிழக அரசும், அதிமுக கட்சி அளவிலும் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். ஆளுநர் என்பவரும் வரையறைக்கு உள்பட்டவர்தான். எனவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து கட்சியின் தலைமை ஆலோசித்து கருத்தை வெளியிடும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழக அமைச்சரவை கூடி அவர்களை விடுவிக்க முடிவெடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.