தமிழ்நாடு

பாம்புகளின் "நண்பன்' பாண்டியன்..

2nd Jul 2019 07:43 AM | எம்.ஞானவேல், சீர்காழி,

ADVERTISEMENT

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது முதுமொழி. ஆனால், சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாம்பு பாண்டியன் என்பவர் இதுவரை வீடுகளில் புகுந்த 5 ஆயிரம் பாம்புகளை லாவகமாகப் பிடித்து வனத்தில் விட்டுள்ளார்.
நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (43). இவரை அப்பகுதியில் பாம்பு பாண்டியன் என்று கூறினால்தான் பலருக்குத் தெரியும். இவர் இதுவரை கடும் விஷம் கொண்ட சுமார் 5 ஆயிரம் பாம்புகளை பிடித்துள்ளதாக 
கூறுகிறார்.
பாம்பு பிடிப்பதில் எவ்வாறு ஆர்வம் வந்தது என பாம்பு பாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: நான் மல்லியம் கிராமத்தில்தான் பள்ளி படிப்பு படித்தேன். அப்போது 5 -ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளிக்கு செல்லும் வழியில் பாம்பாட்டி ஒருவர் பாம்புகளை வைத்து வித்தைக் காட்டிக்கொண்டிருந்தார். அதை சிறிதுநேரம் நின்று வேடிக்கை பார்த்தேன். 
மறுநாள் எங்களது வயலுக்குச் சென்று, வரப்பில் இருந்த பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றேன். அது சீறியது கண்டு அச்சமுற்றேன். பின்னர், சிறு குச்சியைப் பயன்படுத்தி பாம்பை பிடித்தேன். அதுபற்றி எனது நண்பர்களிடம் கூறியபோது, அவர்கள் என்னை பாராட்டினார்கள். அது எனக்கு உற்சாகத்தை தந்தது.
அதன்பிறகு, 8 -ஆம் வகுப்பு படிக்கும்போது எங்களது தெருவில் ஒரு வீட்டில் நல்லபாம்பு புகுந்துவிட்டது. அங்கு சென்று வீட்டினுள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்தேன். இதையறிந்த எனது பெற்றோர், என்னை கண்டித்தனர். அன்று முதல் எனது பெற்றோருக்குத் தெரியாமல் பாம்பு பிடிப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டேன்.
பின்னர், சீர்காழிக்கு வந்து கூலி தொழில் செய்தேன். திருமணம் ஆகியவுடன் எனது மனைவி பாம்பு பிடிக்க தடை விதித்தார்.
சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கொள்ளிடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் யார் வீட்டிலாவது பாம்புகள் புகுந்தால் ஏதாவது ஒருவர் மூலம் என்னை தொடர்பு கொள்வார்கள். நான் அங்கு சென்று வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து வனப் பகுதியில் கொண்டு விட்டுவிடுவேன்.
பாம்பு பாண்டியன் இதுவரை கழுதைவிரியன், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், ஜமுக்காளவிரியன், நல்லபாம்பு, பச்சை பாம்பு, கொம்பேறிமூக்கன், சாரைபாம்பு, பொடையான் பாம்பு ஆகிய பாம்பு வகைகளை பிடித்துள்ளார். ஒருமுறை சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் புகுந்த நல்லபாம்பை பிடிக்க வீட்டின் உத்திரத்தில் ஏறி பாம்பை பிடித்தபோது உத்திரம் உடைந்து பாம்புடன் கீழே விழுந்ததில், பாம்பு கடித்துவிட்டது. இதில் எனக்கு விஷம் ஏறி சுமார் 9 நாள்கள் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 
சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த மறுநாளே ஒரு அழைப்பு வந்ததில், மீண்டும் பாம்பு பிடிக்கச் சென்றேன். 
இதுவரை நான் பிடித்த அனைத்து பாம்புகளும் உயிருடன் பிடிக்கப்பட்டு, வனப்பகுதி விடப்பட்டுள்ளது.
சில நேரங்களில் பாம்புகளை கம்பு, அதற்கான கருவி வைத்து பிடிக்கும்போது, அதன் மூலம் பாம்புக்கு காயம் ஏற்பட்டால் கால்நடை மருத்துவமனையில் உரிய மருந்து வாங்கி சிகிச்சையளித்து வீட்டில் சாக்கில் வைத்து பாதுகாத்து காயம் சரியான பின்னர், வனத்தில் விட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது என்கிறார் பாம்பு பாண்டியன்.
தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பாம்பு பாண்டியனின் மகன் பிரதாப்பும் (19), பாம்பு பிடிக்க கற்றுக்கொண்டு, சுமார் 50 பாம்புகளை பிடித்து வனத்தில் விட்டுள்ளார். பாம்பு பிடி தொழிலை விட்டுவிடக்கூறி பாண்டியனில் மனைவி அவருக்கு தற்போது பேன்ஸி கடை வைத்துக்கொடுத்துள்ளார். கடை வியாபாரத்தின் நடுவில் ஏதேனும் அழைப்பு வந்தால் பாம்பு பிடிக்கச் சென்று விடுவாராம் பாம்பு பாண்டியன். பாம்பு பாண்டியனை தொடர்பு கொள்ள எண். 73732 62719.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT