தமிழ்நாடு

நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன்?: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

2nd Jul 2019 01:36 AM

ADVERTISEMENT


நெடுஞ்சாலைகளில் அரளிச் செடி வைப்பது ஏன் என்பது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசியது:
சாலைகள் அமைக்கும்போது மரங்களை வெட்டிவிடுகின்றனர். அதற்கு நிகராக மரக்கன்றுகளை நடுவதில்லை. அப்படி நட்டாலும், நாட்டு மரங்களை நடுவதில்லை.  அரளிச் செடி போன்றவற்றை வைத்துவிடுகின்றனர். இதனால், பயன் ஏதுவும் இல்லை. இருவாட்சி என்று ஒரு பறவை இருந்தது. அது மிக உயரமான மரங்களில் உள்ள பழங்களையே உண்டு வாழும். அதுபோன்ற பறவைகள் மறைந்து போனதற்கு மரங்கள் இல்லாமல் போனதும் ஒரு காரணம் என்றார்.
அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறுக்கிட்டுக் கூறியது: சாலைகள் அமைப்பதற்கு மரங்கள் வெட்டப்பட்டாலும், உடனே மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோதுதான் மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டன.
துரைமுருகன் (திமுக): ஏரிகளுக்கு நடுவே மரங்களை வைக்காதீர்கள் என்றால், கேட்க மறுக்கின்றனர். கருவேலம் மரங்களை வைத்து விடுகின்றனர். கருவேல மரங்களில் பட்டு வரும் நீர் விவசாயத்தைப் பாதிக்கும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: உலக வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்படும் எல்லாச் சாலைகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அரளிச் செடிகளை சும்மா நடவில்லை. வாகன புகையால் காற்றில் ஏற்படும் மாசுவை அகற்றி, தூயக்காற்றை அரளிச் செடி வெளியிடுகிறது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT