தமிழ்நாடு

நிதித் துறை முதன்மைச் செயலராக எஸ். கிருஷ்ணன் நியமனம்

2nd Jul 2019 04:28 AM

ADVERTISEMENT


தமிழக அரசின் நிதித் துறை முதன்மைச் செயலாளராக எஸ்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் க.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்டார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்ட உத்தரவின் விவரம்:-
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக உள்ள எஸ்.கிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக உள்ள ராஜேஷ் லக்கானி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலர் பொறுப்பை, கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். இதுதொடர்பான புதிய உத்தரவுகள் வெளியாகும் வரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பொறுப்பை லக்கானி கூடுதலாகக்  கவனித்து வருவார் என்று தனது உத்தரவில் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நிதித் துறையில் அனுபவம்: நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கிருஷ்ணன், ஏற்கெனவே அந்தத் துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். மேலும், நிதித் துறை செயலாளராகவும் (செலவினங்கள்), ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொலைநோக்குத் திட்டம் 2023 வெளியிடப்பட்டதிலும், அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் 
மாநாட்டை வடிவமைத்து வெற்றிகரமாக முடித்ததிலும் முக்கியப் பங்காற்றியவர்.
நிதித் துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட பிரதான துறைகளில் அதிக அனுபவங்களைப் பெற்றுள்ள எஸ்.கிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT