தமிழ்நாடு

இந்தியாவில் முதன்முறை: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலைப் பாம்புகளுக்கு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தி ஆராய்ச்சி

2nd Jul 2019 12:40 AM

ADVERTISEMENT


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் காராட்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில் மலைப் பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தி அதன் இயல்புகளைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பாம்புகளின் உடலில் தட்பவெப்பம்,  இனப்பெருக்கம், உடல் இயல்பு குறித்து கண்டறிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 மலைப் பாம்புகளின் வயிற்றுப் பகுதியில் 18 கிராம் எடையுள்ள ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள காராட்சிக்கொரை வன கால்நடை மருத்துவர் டாக்டர் அசோகன் உள் அறுவை சிகிச்சை செய்து இதை பொருத்தி உள்ளார். 10 பாம்புகளில் 3 பெண் பாம்புகள், 7 ஆண் பாம்புகளுக்கு டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டுள்ளன. 
ஆண் பாம்புகள் 12 அடி நீளமும், பெண் மலைப் பாம்புகள் 14  அடி நீளமும் உள்ளவை. இந்த ஆராய்ச்சி  2 ஆண்டுள் தொடர்ந்து நடைபெறும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட 10 பாம்புகளில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் பவானிசாகர் வனப் பகுதியில் விடப்பட்டன. அவை சென்ற பாதையில் ஆன்டெனா மூலம் கிடைக்கும் ரேடியோ சிக்னலை வைத்து பாம்பின் நடமாட்டம், அதன் இயல்புகள் கண்டறியப்பட்டன. 
பாம்புகள் 3 கிலோ மீட்டர் வரை சென்று இரை தேடும்; மான், குரங்குகளை வேட்டையாடும். சில நேரங்களில் மரத்தடியில் நிற்கும் மனிதர்களைக் கூட விழுங்கிவிடும் தன்மைகொண்ட இந்த மலைப் பாம்புகள் 40 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை. 
பொதுவாக இந்த மலைப்  பாம்புகள் 80 முட்டைகள் இட்டு 80 குஞ்சுகள் பொரிக்கும். தற்போது பொருத்தப்பட்ட ரேடியோ டிரான்ஸ்மீட்டர் மூலம் பாம்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டறிய முடியும் என டாக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாகப் பாம்புகளுக்கு மயக்க மருந்து செலுத்தி உள் அறுவை சிகிச்சை செய்து ரேடியோ  டிரான்ஸ்மீட்டர் பொருத்தி பாம்புகள் உயிரிழக்காமல் சிறப்பாக சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் அசோகனுக்கு தில்லியில் உள்ள இந்திய வன விலங்கு ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமேஷ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT