வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறவுள்ளது. முன்னதாக, சன்மார்க்க கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞான சபையில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை (ஜன. 21) நடைபெறவுள்ளது. முன்னதாக, சன்மார்க்க கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகளால் நிறுவப்பட்ட வடலூர் சத்திய ஞானசபையில் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல்பாராயணமும், காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்க கொடியேற்றமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, மருதூர், கருங்குழி வள்ளலார் சந்நிதிகளிலும், காலை 10 மணிக்கு ஞான சபையிலும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருஅருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தினர் செய்துள்ளனர். 

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: ஜோதி தரிசன விழாவைக் காண திரளான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்துத் துறை சார்பில் 50 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் இயக்கம்:: வடலூர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பாதிரிபுலியூர் -விருத்தாசலம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. 

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில் வருகிற 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

வருகிற 21-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூரில் இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் விருத்தாசலம் சந்திப்பை இரவு 10.30 மணிக்கு வந்தடையும். மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு விருத்தாசலத்திலிருந்து புறப்படும் ரயில் காலை 5.50 மணிக்கு திருப்பாதிரிபுலியூர் வந்தடையும். இந்த ரயில் கடலூர் துறைமுகம் சந்திப்பு, குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, ஊத்தங்கால்மங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com