கர்நாடகாவில் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கைகலப்பு?

கர்நாடகாவில் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பைத் தொடா்ந்து எம்.எல்.ஏ ஆனந்த்சிங்
கர்நாடகாவில் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கைகலப்பு?


பெங்களூரு: கர்நாடகாவில் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பைத் தொடா்ந்து எம்.எல்.ஏ ஆனந்த்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கா்நாடகாவில் கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வரும் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜகவினா் மேற்கொண்டுள்ள முயற்சியை தடுக்கும் வகையில், பெங்களூரு அருகே உள்ள பிடதியில் உள்ள தனியார் ஈகிள்டன் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 80 பேரில் 77 பேர் தங்க வைக்கப்பட்டனர். 3 பேர் விடுதிக்கு வரவில்லை. 

இன்று பிற்பகல் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் கே.சி.வேணுகோபால் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு பல்லாரி மாவட்டம் விஜயநகரா தொகுதியைச் சோ்ந்த ஆனந்த்சிங்கிற்கும், கம்பளி தொகுதியைச் சோ்ந்த கணேஷ் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் கைகலப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் ஆனந்த்சிங்கிற்கு தலை, கண், வயிறு, தோள் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ், மாநில காங்கிரஸ் செயல் தலைவா் ஈஸ்வா் கண்ட்ரே ஆகியோர் தெரிவித்தனர். கேளிக்கை விடுதியில் தவறி விழுந்ததால் காயமடைந்துள்ளார் என்று காங்கிரஸ் எம்.எல்.சி ரிஸ்வான் தெரிவித்தார். 

இதனிடையே செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் ஜமீா் அகமதுகான், விடுதியில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்த்சிங்கிற்கு கண்ணில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை ஊடகங்கள் பெரிதாக்கி வருகின்றன என்றார். 

இதனையடுத்து கேளிக்கை விடுதியில் நடந்த கைகலப்பு உறுதியாகியுள்ள நிலையில், ஆனந்த்சிங் தாக்கப்பட்டத்தை கண்டித்து அவரது ஆதரவாளா்கள் பல்லாரி மாவட்டம் ஹொசப்பேட்டை கமலாபுராத்தில் சாலையில் டயா்களை கொளுத்திபோட்டு, மறியலில் ஈடுப்பட்டனர். 

காயங்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com