திங்கள்கிழமை 22 ஜூலை 2019

மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்: முதல்வர் - துணை முதல்வர்

DIN | Published: 17th January 2019 01:32 AM


வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம் என அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி இருவரும் கூட்டாக அதிமுகவின் தொண்டர்களுக்கு புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்: மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்ஜிஆர். அவரின் 102-ஆவது பிறந்த நாள் விழாவை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 
தீய சக்தியின் ஆட்சியின் இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியவர் எம்ஜிஆர். அவர் உருவாக்கிய அந்த வரலாறை தமிழ் நாட்டின் வீர வரலாறாக, எவராலும் வீழ்த்த முடியாத வெற்றி வரலாறாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. 
மக்களவைப் பொதுத் தேர்தலில் நாடே புகழும் வெற்றியைத் தேடித் தந்து, அதிமுகவுக்கு இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய இயக்கம் என்ற புகழைப் பெற்றுத் தந்தவர். எனக்குப் பின்னாலும் கட்சி நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று வீர முழக்கமிட்டவர். அவரின் நம்பிக்கையை கட்சியினரின் நல்லாசியோடு நிறைவேற்றி வருகிறோம்.
எதிரிகளின் சூழ்ச்சிகளையும், துரோகிகளின் சதிகளையும் உடைத்தெறிந்து, நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். 
அதே போல், அதிமுக எவராலும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டை என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். 
ஜெயலலிதா செயல்படுத்தி வந்த நலத் திட்டங்களோடு, புதிய புதிய திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 
இந்தப் பொங்கல் எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக அரசு வழங்கியது. 
எடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும், கெடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும் அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. யார் தடை போட்டாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழக மக்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் பாடுபடுவோம். 
எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையைப் பார்த்து மிரண்டு போயிருக்கின்றனர். அதிமுகவுக்கு அவப் பெயர் உண்டாக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவதூறுச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். உண்மைக்குப் புறம்பாக உளறிக் கொண்டிருக்கின்றனர். 
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்திக் காட்ட வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சிதான் என்பதை உண்மையாக்கிக் காட்ட வேண்டும். 
நம் கண் முன்னே மக்களவைத் பொதுத் தேர்தல் களம் தெரிகிறது. 
எந்தத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், அந்தத் தேர்தல் களத்திலே விசுவாசத் தொண்டர்களாகிய அதிமுகவினர் வெற்றி வாகை சூடுவோம். 
அதற்காக அனைவரும் அயராது உழைப்போம். ஒற்றுமையோடு ஓயாது உழைப்போம். வெற்றிக் கனி பறித்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசத் தொண்டர்கள் என்றுமே வெற்றி வீரர்கள்தான் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். 
அதை எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதமாக எடுப்போம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு
இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு
சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்