செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

பாலமேடு ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள்; அடக்க முயன்ற 48 வீரர்கள் காயம்

DIN | Published: 17th January 2019 01:38 AM
தன்னை பிடிக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசும் காளை.


மதுரை மாவட்டம், பாலமேட்டில் புதன்கிழமை (ஜன.16) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 48 வீரர்கள் காயமடைந்தனர். 
பாலமேட்டில் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க 988 காளைகளும், 846 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து பாலமேட்டில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. விழாவில், ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு விதித்துள்ள நிபந்தனைகளை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வாசிக்க அதை மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். 
அதையடுத்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. போட்டியின் தொடக்கமாக பாலமேடு அய்யனார் கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மகாலிங்கம் மடத்துக்குச் சொந்தமான காளை, பத்ரகாளியம்மன் கோயில் காளை, பாலமுருகன் கோயில் காளை, பட்டாளம்மன் கோயில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. 
பின்னர், வாடிவாசல் வழியாக காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. 846 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தலா 100 பேர் அடங்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மணி நேரம் களத்தில் காளைகளை அடக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளின் திமிலைப் பற்றிக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கோடு வரை விடாமல் சென்ற வீரர்கள் காளைகளை அடக்கியதாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரே காளையை இரண்டு வீரர்கள் பிடித்துச்சென்றால் காளை பிடிபடவில்லை என்று அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
இதில் பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடின. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் காளைகளை அடக்கிச் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிச்சுற்றில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி காளைகளின் கொம்புகள் மற்றும் வாலை பிடிப்பவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஜல்லிக்கட்டில் பாலமேடு, அலங்காநல்லூர், ஊமச்சிகுளம், உசிலம்பட்டி கொண்டையம்பட்டி, குமாரம், சிறுவாலை, தேனி, சிவகங்கை, திருச்சி, வாடிப்பட்டி, பூலாம்பட்டி, குலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் தங்களை அடக்க முயன்ற வீரர்களை முட்டி தூக்கி வீசின. சில காளைகள் பின்னால் வந்து பிடிக்க முயன்ற வீரர்களை கால்களால் உதைத்துத் தள்ளின. பாலமேட்டைச் சேர்ந்த காளை 10 நிமிடங்களுக்கும் மேலாக களத்தை பலமுறைச் சுற்றி வந்து வீரர்களை கதிகலங்க வைத்தது.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 21 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 15 பேர் உள்பட 48 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து பாலமேடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பலத்த காயமடைந்த 13 பேரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் 10 மருத்துவக் குழுக்கள், 12 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. 
இப்போட்டியை விலங்கு நலவாரியக் குழு உறுப்பினர்கள் கண்காணித்தனர். ஜல்லிக்கட்டில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் கே.பி.சண்முகராஜேஸ்வரன், மதுரை சரக காவல் துணைத்தலைவர் பிரதீப்குமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர். 
காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் போட்டிகளை ஒழுங்குபடுத்தினார். பாதுகாப்புப் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர். 
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளில் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவனியாபுரத்தில் 47 பேர் காயம்
 பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.15) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 47 பேர் காயமடைந்தனர். 
அவனியாபுரத்தில் நிகழாண்டில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவது தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்களிடையே எழுந்த பிரச்னையால் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் 3 வழக்குரைஞர்கள் மற்றும் கிராமத்தினர் உள்பட 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தன.
முதல்முறையாக மாடுபிடி வீரர்களுக்கு ரூ. 12-க்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலும், ரூ. 300-க்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலும் காப்பீடு வசதி செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன், மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களும் காளைகளும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். 
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 
விழாவில் 691 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 8 சுற்றுகளில் 480 காளைகள் களத்தில் பாய்ந்தன. அவற்றை அடக்க 594 வீரர்களில் 550 பேர் களத்தில் இறங்கினர். 
போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து, ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய இரு காவலர்கள், காசிராஜன், ராஜ்கமல், சிறுவன் மணிகண்டன் மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர், பார்வையாளர்கள் என 47 பேர் காயமடைந்தனர். 
இவர்களில் பலத்த காயமடைந்த 9 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளிக் காசு, மிக்ஸி, ஃபேன், கேஸ் அடுப்பு, வேஷ்டி, சட்டை உள்பட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. 
முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு 9 காளைகளையும், முடக்கத்தானை சேர்ந்த அறிவு அமுதன் 7 காளைகளையும், சோலையழகுபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி, அஜித்குமார் ஆகிய இருவரும் 6 காளைகளையும் அடக்கினர்.
கீழ்மலையனூரைச் சேர்ந்த அங்காள பரமேஸ்வரியின் காளை முதல் இடத்தையும், காஞ்சரங்குளத்தைச் சேர்ந்த கோயில் காளை 2ஆவது இடத்தினையும், ராஜாக்கூர் எம்.பி. ஆம்புயனஸ் காளை மூன்றாவது இடத்தையும் பிடித்ததாக விழாக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

 

பெரியசூரியூரில் 40 பேர் காயம்
 திருச்சி அருகே உள்ள பெரியசூரியூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். 
திருச்சி அருகே உள்ள பெரியசூரியூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு கோட்டாட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். 
திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். சங்கிலி கருப்பு கோயில் பெரிய குளத்தில் நடைபெற்ற போட்டியை மக்களவை உறுப்பினர் ப.குமார் தொடங்கி வைத்தார்.
போட்டித் தொடங்கியவுடன் முதலில் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. 
வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். இதில், காளைகள் முட்டியதில் புதுக்குடியை சேர்ந்த ரஜினி (36) , விமானநிலையம் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் பாலசுப்பிரமணியன் (46), சோமரசம்பேட்டை சந்தாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (24) உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இவர்களில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
போட்டியில், 509 காளைகளும், 260 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மாடுபிடி வீரர்களை திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். அதேபோல், கால் நடைத்துறை இணை இயக்குநர் முருகேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளையும் பரிசோதித்தனர். போட்டியின் இறுதியில் பெரியசூரியூரை சேர்ந்த கோவிந்தன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. 
போட்டியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி, மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் லலிதாலெட்சுமி, திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமமுக நிர்வாகிகள் ஜெ. சீனிவாசன், ஆர். சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் 550 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்
மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம்:  கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது-  அமைச்சர் சி.வி. சண்முகம்
தரமற்ற மதிய உணவால் மூன்று ஆண்டுகளில் 900 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டார்கள், இறப்பு எண்ணிக்கை ‘0’: மனித வள மேம்பாட்டுத்துறை!
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதியுதவி அளிக்கப்படாது: மத்திய அரசு திட்டவட்டம்
சரவணபவன் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சைக்கு அனுமதி: மகனின் பொறுப்பு என்று கூறிவிட்டது நீதிமன்றம்