சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

தடைகள் தகர்த்தெறியப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN | Published: 17th January 2019 01:13 AM
சேலம் அண்ணா பூங்கா அருகே எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை  திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதல்வர்


எத்தனை தடைகள், இன்னல்கள் வந்தாலும், எத்தனை இழிச்சொல்லுக்கும், பழிச்சொல்லுக்கும் ஆளானாலும் அத்தனையும் தகர்த்தெறியப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வெண்கல உருவச் சிலைகள் கொண்ட மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்து பேசியது:
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமத்தில் இருந்து நகரம் வரை பொருளாதாரம், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்குவதற்கு தங்களையே அர்ப்பணித்தவர்கள்.
மேலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சிவந்தி ஆதித்தனார் ஆகியோருக்கு மணி மண்டபங்களை நிறுவியுள்ளோம். ஏழை, எளிய மக்களுக்காக உழைத்த ராமசாமி படையாச்சியாருக்கு ரூ.2.1 கோடியில் மணிமண்டபம் அறிவிக்கப்பட்டு, அவர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என உறுதி அளித்தோம்.
திருநெல்வேலி மாவட்டம், விளாத்திக்குளத்தில் இசைமேதை நல்லப்ப சாமிக்கு ரூ.25 லட்சத்தில் நினைவுச் சின்னம், தருமபுரி பாப்பாரப்பட்டியில் ரூ.1.50 கோடியில் பாரத மாதா நினைவாலயம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. புலித்தேவனுக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படுகிறது. சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு அனைவரின் சார்பில் எம்.ஜி.ஆர். சாலை என்று பெயர் சூட்டப்படும். எத்தனை தடைகள் வந்தாலும், எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், எவ்வளவு இழிச்சொல்லுக்கும், பழிச்சொல்லுக்கும் ஆளானாலும் அத்தனையும் தகர்த்தெறியப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.பி.க்கள் வி.பன்னீர்செல்வம், காமராஜ், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.எல்.ஏ.க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், கு.சித்ரா, பி.மனோன்மணி, ராஜா, வெற்றிவேல், மருதமுத்து, சின்னதம்பி ஆகியோர் பங்கேற்றனர்.


 

More from the section

பாமக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தின் அரசியல் தீர்மானம் என தெரியுமா? 
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு
திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு 
சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துவிட்டார் ராமதாஸ்: கே.எஸ்.அழகிரி சாடல்
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீட்கும் வரை சந்தேகம் உங்கள் மீதே: மு.க.ஸ்டாலின்