சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

சேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

DIN | Published: 17th January 2019 02:44 AM
சேலம் அரியானூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணியை மகுடஞ்சாவடியில் புதன்கிழமை தொடங்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


சேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மகுடஞ்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தெரிவித்தார்.
விழாவில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர், மகுடஞ்சாவடி பகுதிகளில் அடிக்கடி விபத்து நிகழ்வதால், இரு இடங்களிலும் உயர்மட்டப் பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல், ரூ.45 கோடியே 5 லட்சத்தில் சேலம் கந்தம்பட்டியில் மேம்பாலம், ஆத்தூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள வசிஷ்ட நதியின் குறுக்கேயும், மத்திய சாலை திட்டத்தின் கீழ் புழுதிகுட்டை சந்துமலை சாலைப் பகுதியிலும், தும்பல் அருகில் என 4 உயர்மட்ட மேம்பாலங்கள் விரைவில் கட்டப்பட உள்ளன.
விமான நிலையத்தில் உள்ள வசதிகள் போல், பேருந்து நிலையத்திலும் தமிழகத்தில் முதன்முறையாக சேலத்தில் புதிய பேருந்து போர்ட் அமைக்கப்பட உள்ளது. மேலும், முதன்முறையாக ஏற்காடு சுற்றுலாப் பயணிகள் அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் சிற்றுந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை பேருந்து வசதி பெறாத ஏற்காட்டிலிருந்து குண்டூருக்கும், வாழப்பாடியிலிருந்து மல்லூருக்கும், ஆத்தூரிலிருந்து சேமூருக்கும் சிற்றுந்து சேவைகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. வீரகனூரில் இருந்து கோவைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து விடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கட்சியின் சார்பில் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பதாகக் கூறி பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் மாவட்ட அனைத்து கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு நாங்கள் அனைவரும் சென்று வந்திருக்கிறோம். அதிமுக அரசு அதிகமான திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, எந்த பகுதிகளுக்கு சென்றீர்கள்? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை தேடிச் செல்கின்றனர். அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர வேண்டுமென உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரு கைகளையும் இழந்தவருக்கு மற்றவரின் இரு கைகளை எடுத்து பொருத்தப்பட்டுள்ளது. கால்நடைகள் வளர்ப்பவர்கள் சிறப்படைய கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தலைவாசல், கூட்டு சாலை பகுதியில் இந்தியாவிலேயே இல்லாத வகையில் சிறப்பு கால்நடை நவீன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
சேலம் முதல் செங்கப்பள்ளி வரை செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாகி உள்ளதால் விபத்து ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க இச்சாலை விரைவில் எட்டு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கு 103 கிலோ மீட்டருக்கு ரூ.1,937 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது என்றார். 
முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வரவேற்றார். சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனோன்மணி, சித்ரா, செம்மலை, ராஜா, வெங்கடாஜலம், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

More from the section

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீட்கும் வரை சந்தேகம் உங்கள் மீதே: மு.க.ஸ்டாலின் 
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து: ஸ்டாலின் உறுதி
மக்களவை தேர்தலில் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்: திமுக அறிவிப்பு
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? 
மக்களவைத் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் இதைப் பற்றியும் பேசலாமா?