வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

காசநோய் பாதிப்பு: 6-ஆம் இடத்தில் தமிழகம்

DIN | Published: 17th January 2019 03:07 AM


கடந்த ஆண்டு நாடு முழுவதும் 21.25 லட்சம் பேர் காசநோய் பாதிப்புக்குள்ளானதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 4 லட்சம் பேருக்கு அந்த நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துவிட்டதாகவும், இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை வேரறுக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடர்பு விழிப்புணர்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயை குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, சிகிச்சைக் காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 21.25 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.5 லட்சம் அதிகமாகும்.
கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதன் நீட்சியாகவே கடந்த ஆண்டின் புள்ளி விவரங்களும் அமைந்திருந்தன.
2018-இல் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 4 லட்சத்து 9 ஆயிரம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 1,03,314 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 76,634 பேரும், அரசு மருத்துவமனைகளில் 26,680 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். அதன் ஒருபகுதியாக வரும் மார்ச் மாதத்தில் மாவட்ட வாரியாக கள ஆய்வு ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட உள்ளது. இதன் மூலம், காசநோய் குறித்த துல்லியமான கள நிலவரம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சித்ரா பௌர்ணமி விழா: திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம்
சொந்தக் கிராமத்தில் வாக்களித்த  முதல்வர்
பெரியகுளத்தில்  துணை முதல்வர் வாக்களிப்பு
புதுகையில் அமமுக வேட்பாளர் தர்னா; பெண் வாக்காளர் மயங்கி விழுந்து மரணம்
பிளஸ் 2  பொதுத்தேர்வு முடிவுகள்: 2 நிமிடங்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்