வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

DIN | Published: 17th January 2019 08:50 AM


மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அமெரிக்க கண்டத்தில் இருப்பவருக்குக் கூட அலங்காநல்லூர் என்றால்  அத்துப்படி. அந்தயளவுக்கு ஜல்லிக்கட்டு புகழை ஒட்டுமொத்த உலகத்திற்கும் கொண்டு சென்ற ஊர் அலங்காநல்லூர். அலங்காநல்லூர் என்பது மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். 2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,331 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 6,286 பேர் ஆண்கள், 6,045 பேர் பெண்கள்.

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டிகள், தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்றாலும், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாக உள்ளது. அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வியாழக்கிழமை (ஜனவரி 17) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிவரை நடைபெறும் இந்த போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,400 காளைகளும், 849 காளையர்களும் களத்தில் உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.  

போட்டியை காண ஏராளமானோர் வருகை தந்துள்ளதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தலைமையில் 7 ஏஎஸ்பிக்கள், 15 டிஎஸ்பிக்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிறந்த மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு கார், தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

2000 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் உடைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை, கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தனர். தமிழக முதல்வர் ஒருவர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தது அதுதான் முதல்முறை ஆகும்.

கடந்த ஆண்டு நடந்த எட்டு சுற்றுகளாக நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 700 மாடுபிடி வீரர்களும், 520 காளைகளும் பங்கேற்றனர். இதில் 8 காளைகளை பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் என்பவர் மாடுபிடி வீரர்களில் முதலிடத்தையும், ஆறு காளைகளை பிடித்த சரத், சங்கிலி முருகன் ஆகிய இருவரும் இரண்டாமிடத்தையும், வினோத் ராஜ் என்பவர் மூன்றாவது இடத்தையும் பெற்றதாகவும், மொத்தம் ஒன்பது காளைகள் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சித்ரா பௌர்ணமி விழா: திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம்
சொந்தக் கிராமத்தில் வாக்களித்த  முதல்வர்
பெரியகுளத்தில்  துணை முதல்வர் வாக்களிப்பு
புதுகையில் அமமுக வேட்பாளர் தர்னா; பெண் வாக்காளர் மயங்கி விழுந்து மரணம்
பிளஸ் 2  பொதுத்தேர்வு முடிவுகள்: 2 நிமிடங்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்